

கோவை: வனத் தீ தடுப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் உள்ள சவாலான சூழலை எதிர்கொள்ளும் வகையில், தற்போது ‘ட்ரோன்’ மூலம் உணவு, குடிநீர் வழங்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கென பிரத்யேக ‘ட்ரோன்’ இம்மாத இறுதிக்குள் தருவிக்கப்பட்டு, கோவை வனக்கோட்டத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதி ஆசிய யானைகளின் வாழ்விடமாக உள்ளது. யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதால் அடிக்கடி மனித- விலங்கு மோதல் நடைபெறும் பகுதியாக கோவை மாவட்ட வனப்பகுதி அறியப்படுகிறது.
தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட 7 வனச்சரகங்களில் உள்ள வனப்பகுதியில் 300 கிமீ. தொலைவுக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டில் கோவை வன கோட்டத்துக்கு உட்பட்ட மதுக்கரை வனச்சரகத்தில் உள்ள நாதே கவுண்டன்புதூர் அருகே மலையில் ஏற்பட்ட காட்டுத்தீ 7 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு முற்றிலும் அணைக்கப்பட்டது. தீயணைப்புப் பணியில் வனத்துறையினர் 200-க்கும் மேற்பட்டோரும், தன்னார்வலர்களும் ஈடுபட்டனர். இதில் காட்டுத்தீயை அணைப்பது பெரும் சவாலான நிலையில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வனத் தீ தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் மலைப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் காலங்களில் களப்பணியில் ஈடுபடும் வனத்துறை அலுவலர்கள், ஊழியர்களுக்கு உணவு மற்றும் குடிநீரை எடுத்துச் செல்வது கடும் சவாலான பணியாக உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு ‘ட்ரோன்’ மூலம் உணவு மற்றும் குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்ல வனத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கென பிரத்யேக ‘ட்ரோன்’ வாங்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறியதாவது: வனத் தீ தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தை வனத்துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தீத்தடுப்பு உபகரணங்கள் வாங்குதல், தீத்தடுப்புக் கோடுகள் உருவாக்குதல் மற்றும் பராமரிப்பு, மண் மற்றும் ஈரப்பத பாதுகாப்புப் பணி, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர், தேவையான உபகரணங்களை மலை உச்சிக்கு கொண்டு செல்வது சிரமமான பணியாக உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு மலை உச்சி பகுதியில் தீத்தடுப்பு பணியில் ஈடுபடும் வனத்துறையினருக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ‘ட்ரோன்’ மூலம் எடுத்து சென்று விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இந்த வகை ‘ட்ரோன்’கள் சுமார் 10 முதல் 15 கிலோ எடையுள்ள பொருட்களை எளிதில் ஏற முடியாத மலை உச்சியில் 100 மீட்டர் உயரம் வரை பறந்து சென்று குறிப்பிட்ட இடத்தில் இறங்கும் வகையில் ஜி.பி.எஸ். மூலம் இயக்கப்படும். இந்த ‘ட்ரோன்’ சேவை விரைவில் கோவை மாவட்ட வனத்துறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சுமார் ரூ.7.50 லட்சம் மதிப்பில் ‘ட்ரோன்’ ஆர்டர் தந்துள்ளோம். இந்த மாத இறுதிக்குள் ‘ட்ரோன்’ பெறப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும், என்றார்.