தமிழக - கர்நாடகா வனப்பகுதியில் கால்தடத்தை ஆய்வு செய்து ஒற்றை யானையை தேடும் பணி தீவிரம்
ஓசூர்: தமிழக - கர்நாடகா வனப்பகுதியில் கால் தடத்தின் பதிவை வைத்து ஒற்றை யானையைத் தேடும் பணியில் இருமாநில வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கடந்த 18–ம் தேதி ஒற்றை யானை தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழக மற்றும் கர்நாடக மாநில வனத்துறையினர் ஒற்றை யானையைப் பிடிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், ஒற்றை யானை கடந்த 3 நாட்களாக வனத்துறையின் தேடுதல் வேட்டையில் சிக்காமல் தப்பி வருகிறது. ஏற்கெனவே, யானை நடமாட்டம் உள்ள பகுதியில் ட்ரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு பணி நடைபெற்றது.
இந்நிலையில், 3-வது நாளாக நேற்று இருமாநில வனத்துறையினர் கால்நடை மருத்துவரின் உதவியுடன் வனப்பகுதியில் பதிந்துள்ள கால் தடத்தின் மூலம் ஒற்றை யானை நடமாட்டம் உள்ள பகுதியைக் கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.மேலும், ஒற்றை யானை மீண்டும் வேறு திசையில் கிராமத்துக்குள் செல்வதை தடுக்கவும் தனிக்குழு அமைத்துக் கண்காணித்து வருகின்றனர்.
இது தொடர்பாக வனத் துறையினர் கூறியதாவது: ஒற்றை யானை தாசரப் பள்ளியில் ஒரு பெண்ணை தாக்கிவிட்டு கும்ளாபுரம் வழியாக தேவர் பெட்டா வனப் பகுதிக்குள் நுழைந்துள்ளது. அப்பகுதி அடர்ந்த வனப் பகுதி மற்றும் காவிரி ஆறு செல்வதால் தண்ணீருக்காக அங்கு சென்றிருக்கலாம். அது மீண்டும் உணவுக்காகக் கிராமத்துக்குள் வர வாய்ப்புள்ளது. இதனால், அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், வனப்பகுதியில் கால் தடம், சாணம் ஆகியவற்றை ஆய்வு செய்து யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
