

உதகை: நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் பல்வேறு அரிய வன விலங்குகள் வசித்து வருகின்றன. மிகவும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக கருதப்பட்டு ஹெலிகாப்டர் மற்றும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் வெளி ஆட்கள் அனுமதி இன்றி உள்ளே நுழையக் கூடாது.
இந்நிலையில் கடந்த 10-ம் தேதி உதகையை அடுத்த தலை குந்தா பகுதியில் உள்ள எர்த்தன் டேம் என்ற காப்புக் காட்டுக்குள் காஞ்சிபுரத்தை சேர்ந்த தாகூர் சுரேஷ் பாபு ( 27 ) என்ற யூடியூபர், உதகையை சேர்ந்த பைசல் ரகுமான் ( 26 ), முகமது நவாஸ் ( 23 ) ஆகியோர் உதவியுடன் சென்று ட்ரோன் உட்பட சில நவீன கேமராக்கள் மூலம் சாகச வீடியோ எடுத்து யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளார். யூடியூபில் பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இதன் பேரில் யூடியூபர் தாகூர் சுரேஷ் பாபு உட்பட 3 பேரையும் உதகையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அனுமதியின்றி சென்றது உறுதியானது. மேலும் அவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தாகூர் சுரேஷ் பாபு உட்பட 3 பேருக்கும் தலா ரூ.25,000 வீதம் ரூ.75,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறும்போது, ‘‘உள்ளூர் மக்கள் உதவியுடன் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் இவ்வாறு அனுமதி இன்றி சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வன அலுவலர்கள் உதவி இல்லாமல் வனப் பகுதிக்குள் செல்லக் கூடாது’’ என்றார்.