

கோவை: கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் மலைப் பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதைத் தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் கோயிலுக்கு செல்லும் தார் சாலை, படிக்கட்டுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளன. மலைப் பாதையில் அடிக்கடி சிறுத்தைகள், யானைகள் போன்றவன விலங்குகள் கடந்து செல்கின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு மலைப் பாதையில் சிறுத்தை தென்பட்டது. காரில் சென்ற பக்தர் ஒருவர் இதனை செல்போனில் பதிவு செய்து வீடியோ வெளியிட்டிருந்தார். மலைப் பாதையில் சிறுத்தை நடமாட்டத்தைத் தொடர்ந்து, வனத்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்று வரும் பக்தர்கள் மற்றும் வாகனங்களின் சத்தம் காரணமாக வன விலங்குகள் பெரும்பாலும் பகல் நேரங்களில் கடந்து செல்வதில்லை. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பொதுமக்கள் நடந்து செல்ல மற்றும் இரு சக்கர வாகனத்தில் சென்று வர வனத் துறையின் மூலம் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோயில் நிர்வாக துணை கண்காணிப்பாளரிடம் அறிவுறுத்தப் பட்டுள்ளது'’ என்றனர்.