காட்டுப்பன்றிகளால் விவசாயம் கேள்விக்குறி: வனத்துறை அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் @ நெல்லை

படம்: மு.லெட்சுமி அருண்
படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலி: வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க வலியுறுத்தி திருநெல்வேலியில் வனத்துறை அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள விளை நிலங்களில் மட்டுமின்றி, சமவெளி பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள்ளும் காட்டுப் பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. மானூர், அழகிய பாண்டிய புரம், அம்பாசமுத்திரம், கடையம் பகுதி களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. காட்டுப் பன்றிகளை பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும், காட்டுப் பன்றிகளை வனத்துறையினர் சுட்டுப் பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகம் முன் விவசாயிகள் நேற்று போராட்டத் தில் ஈடுபட்டனர்.

அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்டச் செயலர் ஆபிரகாம், இணைச் செயலர் மகாலிங்கம் தலைமை வகித்தனர். மாவட்ட வன அலுவலர் முருகனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், “ திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் காட்டுப்பன்றி கள், மான்கள் தொல்லையால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. காட்டுப்பன்றிகளை விரட்ட விவசாயிகளுக்கு நாய் குரைப்பது போன்ற ஸ்பீக்கர் மற்றும் நீல்போ மருந்துகளை வனத்துறையினர் வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய தொழிலாளர் சங்கம்: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு சார்பில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊரக வேலை திட்ட தொழிலாளர்களை வெளியேற்றி, நூறு நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் மத்திய அரசை கண்டிப்பதாக கூறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுடலை ராஜ் தலைமை வகித்தார். ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி கற்பகம் தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் ஸ்ரீராம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க செயலர் அருணாசலம் உள்ளிட்டோர் பேசினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in