

சென்னை: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை உயிருடன் ஆரோக்கியமாக இருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சமூக வலைதளங்களில் அரிக்கொம்பன் யானை இறந்துவிட்டதாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது. கம்பம் பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகே சுற்றிக்கொண்டிருந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்து, களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் கடந்த ஆண்டு ஜூன்6-ம் தேதி விட்டனர்.
வனத்துறையின் தொழில்நுட்ப பிரிவு, அந்த யானையை 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அது தொடர்பான தகவல்கள், களக்காடு -முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநருக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அரிக்கொம்பன் யானை இடமாற்றம் செய்து 8 மாதங்கள் ஆன நிலையில் தற்போது மேல் கோதையார் அணை பகுதியில் தனது வாழ்விடத்தை அமைத்துக் கொண்டுள்ளது. அந்த யானை தற்போது ஆரோக்கியமாக உள்ளது.
அதன் உணவு தேடும் முறை சிறப்பாகவே உள்ளது. அண்மைக்காலமாக மனித குடியிருப்புகள், விவசாய நிலங்களை தேடி வராத வகையில் அதன் பழக்கமும் மாறியுள்ளது. இந்த யானை ரேடியோ காலர் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சராசரியாக தினமும் 3 கிமீ தொலைவுக்கு சுற்றி வருகிறது. கடந்த ஜன.28-ம் தேதி முத்துக்குழிவயல் பகுதியில் அரிக்கொம்பன் உலாவியதை களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் மற்றும் மத்திய அரசின் பாதுகாப்பு தணிக்கை அணியினர் நேரில் பார்த்துள்ளனர். அந்த யானை உயிருடன் ஆரோக்கியமாகவே உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.