மின் வாரியம் வெட்டி வீசும் மரக்கிளைகளுக்கு மீண்டும் வாழ்வு கொடுக்கும் இயற்கை ஆர்வலர் குழு @ மதுரை

சொருக்குடி கண்மாய் கரையில் போத்து முறையில் பதியமிடப்பட்ட அரச மரக் கிளையை நடவு செய்த இயற்கை ஆர்வலர் குழு.
சொருக்குடி கண்மாய் கரையில் போத்து முறையில் பதியமிடப்பட்ட அரச மரக் கிளையை நடவு செய்த இயற்கை ஆர்வலர் குழு.
Updated on
1 min read

மதுரை: மின் வாரியம் வெட்டி வீசும் மரக்கிளைகளை ‘போத்து’ முறையில் பாதுகாத்து, நீர்நிலைகளில் நடவு செய்து மரமாக வளர்த்து வருகிறது ஒத்தக்கடையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் குழு ஒன்று. நெடுஞ்சாலை மற்றும் தெரு வோரங்களில் வளர்ந்துள்ள மரங்கள் மின்கம்பிகளை உரசிச் செல்லும்போது, மின்தடை ஏற்படுகிறது.

இதனால், மின்வாரியம் சார்பில் மாதம் ஒருமுறை மின்தடை அறிவிக்கப்பட்டு, மின்கம்பிகளை உரசிச் செல்லும் மரக் கிளைகள் வெட்டப்படுகின்றன. இவ்வாறு வெட்டப்படும் மரக்கிளைகள் அங்கேயே விட்டுச் செல்லப்படுகின்றன. அவற்றை சிலர் விறகுக்காக எடுத்துச் செல்கின்றனர். சிலர் அங்கேயே தீயிட்டு எரிக்கின்றனர்.

இந்நிலையில், மின்வாரியம் வெட்டி வீசும் மரக்கிளைகளை நீர்நிலைகளில் நடவு செய்து, மீண்டும் மரமாக வளர்க்கும் திட்டத்தை, யானைமலை ஒத்தக்கடையைச் சேர்ந்த மு.ரா.பாரதிதாசன், எம்.கோபாலகிருஷ்ணன், மாரியப்பன், விவேகானந்தன் உள்ளிட்ட 20 பேர் கொண்ட இயற்கை ஆர்வலர்கள் குழு செயல்படுத்தி வருகிறது.

இக்குழுவினர் மின்வாரிய ஊழியர்கள் வெட்டிப்போடும் மரக்கிளைகளில் பெரிய கிளைகளை தேர்வு செய்து, போத்து முறையில் வெட்டப்பட்ட இடங்களில் சாணம் தடவி, வைக்கோலால் சுற்றி காயாமல் 2 நாள் பாதுகாக்கின்றனர். அந்த கிளை நடுவதற்கு ஒருநாள் முன்னதாக நீர்நிலைகளில் பள்ளம் வெட்டி ஆறப் போடுகின்றனர். பின்னர், அந்த பள்ளத்தில் மரக்கிளையை நட்டு வளர்க்கின்றனர்.

சமீபத்தில், உலக ஈரநில தினத்தையொட்டி, ஆமூர் ஊராட்சி சொருக்குளிப்பட்டியில் உள்ள சொருக்குடி கண்மாய் கரையில் போத்து முறையில் பதியமிடப்பட்ட 24 அரச மரக்கிளைகளை, ஆமூர் ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டீஸ்வரி, வார்டு உறுப்பினர் பொன்மலர், இயற்கை ஆர்வலர்கள் பாரதிதாசன், கோபாலகிருஷ்ணன், மனோகரன், விவேகானந்தன் மற்றும் பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து நடவு செய்தனர்.

இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் கூறுகையில், மின்கம்பிகளை உரசிச் செல்லும் மரக்கிளைகளை மின்வாரியம் வெட்டுகிறது. அதில் பெரிய கிளைகளை தேர்வு செய்து மண்ணுக்கும், மனிதனுக்கும் பயனளிக்கும் வகையில் போத்து முறையில் நீர்நிலைகளில் நட்டு வருகிறோம்.

மரக்கன்று நடும்போது அதன் பலனுக்காக 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். போத்து முறையில் நடவு செய்யப்படும் மரக்கிளைகள் ஓராண்டிலேயே பலனளிக்கும். போத்து முறையில் புங்கம், வேம்பு, அரசு, மகிழம் மரங்களை நீர்நிலைகளில் நட்டு வருகிறோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in