

சென்னை: எண்ணூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு குறித்து தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை, எண்ணூர் பகுதியில் கடந்த டிச.26 நள்ளிரவு தனியார் தொழிற்சாலையின் குழாய்களில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவினால் அருகில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. தொடர்ந்து தகுந்த நிபுணர்கள் உடனே வரவழைக்கப்பட்டு, 20 நிமிடங்களில் அந்தத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து போதுமான ஆம்புலன்ஸ்களை உடனடியாக ஏற்பாடு செய்து, நிலைமை சரிசெய்யப்பட்டது.
இந்த வாயுக் கசிவுக்கான காரணத்தைக் கண்டறிய தமிழக அரசு 7 பேரைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவை அமைத்தது. இந்நிலையில் அக்குழு வாயுக் கசிவு மற்றும் பரிந்துரைகளை வழங்கி உள்ளது. அது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
தொழில்நுட்பக் குழு தனது விரிவான ஆய்வு மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு எண்ணூர் கடற்கரைக்கு அருகில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் உரத்தொழிற்சாலையின் கடலுக்கு அடியில் அமோனியா கொண்டு செல்லும் குழாயில் இருந்து அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது என்று முடிவு செய்துள்ளது. மிக்சாம் புயல் காரணமாக குழாயைச் சுற்றியுள்ள கனமான கிரானைட் பாறைகள் இடமாற்றம் கொண்டதால் குழாயில் சேதம் ஏற்பட்டு அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று குழுவால் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பின்வருவனவற்றை மேற்கொள்ளவும் குழு பரிந்துரைத்துள்ளது.
தொழில்நுட்பக் குழுவின் மேற்கண்ட அறிக்கையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அரசிடம் சமர்ப்பித்துள்ளது. குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டு, தொழில்நுட்பக் குழுவின் அனைத்துப் பரிந்துரைகளையும் உடனடியாக அமல்படுத்தி, அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.