

நாகர்கோவில்: வனத்துக்குள் வைரஸ் பாதிக்கப்பட்டு சோர்ந்து கிடந்த சிறுத்தை குட்டிக்கு, வனத் துறை மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு வனப்பகுதியில் உள்ள சிலோன் காலனியில், அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஒரு சிறுத்தை குட்டி சோர்ந்து கிடந்தைப் பார்த்த பொதுமக்கள், அச்சமடைந்து கூச்சலிட்டனர். மேலும், இதுகுறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
களியல் பகுதி வனவர் முகைதீன் தலைமையிலான ஊழியர்கள் அங்கு வந்து, சுமார் 4 மாதமான சிறுத்தை குட்டியை மீட்டனர். நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வனத் துறை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்ட சிறுத்தை குட்டியை, வனத் துறை மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். அதற்கு வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, சிறுத்தை குட்டிக்குமுதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன் ரத்த மாதிரிகள்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறும்போது, “சிறுத்தை குட்டிக்கு வன விலங்குகளைத் தாக்கும் ‘கெனன் டிஸ்டம்பர்’ என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. தாயுடன் சென்றபோது நோய்த் தொற்றால் வேகமாகச் செல்ல முடியாமல் பிரிந்திருக்க வேண்டும். ரத்தப் பரிசோதனை முடிவு கிடைக்க 3 நாட்களாகும். அதுவரை சிறுத்தை குட்டி பலவீனம் அடையாத வகையில், தக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ அறிக்கை வந்த பின்னர் குமரி வனப் பகுதியில் மீண்டும் விடுவதா அல்லது வண்டலூர் மிருகக்காட்சி சாலைக்கு அனுப்புவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.