சென்னை, டெல்லி உட்பட 10 நகரங்களில் அனல் காற்றால் இறப்பு விகிதம் அதிகரிக்கும்: சர்வதேச இதழில் ஆய்வுத் தகவல்

சென்னை, டெல்லி உட்பட 10 நகரங்களில் அனல் காற்றால் இறப்பு விகிதம் அதிகரிக்கும்: சர்வதேச இதழில் ஆய்வுத் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: `அனல் காற்றின் விளைவால் இந்தியாவில் ஏற்படும் இறப்பு விகிதம்: விரிவான நகர ஆய்வு' என்றதலைப்பில் ஒரு ஆய்வு சென்னை,டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத், புனே,வாராணசி, சிம்லா, கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் சுற்றுச்சூழல் தொடர்பான சர்வதேச இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் மாதங்களில் சென்னை, டெல்லி உட்பட 10 நகரங்களில் அனல் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிக சராசரி வெப்பநிலையானது ஒரு வருடத்தில் 97% நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. ஒரு நாளுக்கு ஒரு நகரத்தில் வெயில் அதிகமாக பதிவு செய்யும் போது தினசரி இறப்பு விகிதத்தில் 12.2% அதிகரிக்கும். மேலும், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு அனல் காற்றின் தாக்கம் தொடரும் போது தினசரி இறப்பு 14.7% அதிகரிக்கும். மூன்று நாட்களுக்கு இது 17.8% ஆகவும், அதிக வெப்பநிலை ஐந்து நாட்கள் தொடர்ந்து நீடிக்கும் போது, தினசரி இறப்பு 19.4% ஆகவும் அதிகரிக்கலாம்.

மிகவும் அதிகமான அனல் காற்று பதிவாகும் பட்சத்தில் தினசரிஇறப்பு 33.3 சதவீதமாக இருக்கலாம். தினசரி இறப்பு விகிதத்தில் அனல் காற்றின் தாக்கத்தால் ஏற்பட்டது தொடர்பான வலுவான ஆதாரங்கள் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டன. நீண்ட மற்றும் அதிக தீவிரமானஅனல் காற்றானது, அதிகரித்த இறப்பு விகிதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

நகரங்களில் 40 டிகிரி செல்சியஸை வெப்பநிலை எட்டும்போது அனல் காற்று வீசும் என்று இந்தியவானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுவே மலைப்பகுதியான இடங்களில் 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானால் அனல் காற்று வீசும். இயல்பாக பதிவாகும் வெப்பநிலையை விட கூடுதலாக 4.5 டிகிரி செல்சியஸ் முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை பதிவானால் அது அனல் காற்று என்றும் இயல்பை விட 6.4 டிகிரி செல்சியஸுக்கும் கூடுதலாக பதிவானால் அது மிகுந்த அனல் காற்று என்றும் கூறப்படுகிறது.

வரும் மாதங்களில் சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத், புனே, வாராணசி, சிம்லா, கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் அனல் காற்று அதிகரிக்கும்.

இந்தியாவில் மார்ச் முதல் ஜூன் வரை பல நகரங்களில் அனல் காற்றின் தாக்கம் இருக்கும். சில நகரங்களில் இது ஜூலை வரை நீடிக்கும். கடந்த 2016, 2018, 2019, 2023-ம் ஆண்டுகளில் நாட்டின் பல நகரங்களில் அனல் காற்றின் தாக்கம் இருந்தது. இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in