தாளவாடி அருகே கிராமத்தில் புகுந்த ஒற்றை கொம்பன் யானையால் அச்சம்

தாளவாடியை அடுத்த மாவநத்தம் கிராமத்தில், நேற்று முன்தினம், விளைநிலங்களைச் சேதப்படுத்திய ஒற்றைக் கொம்பன் யானை.
தாளவாடியை அடுத்த மாவநத்தம் கிராமத்தில், நேற்று முன்தினம், விளைநிலங்களைச் சேதப்படுத்திய ஒற்றைக் கொம்பன் யானை.
Updated on
1 min read

ஈரோடு: தாளவாடியை அடுத்த மாவநத்தம் கிராமத்தில் விளை நிலங்களைச் சேதப்படுத்திய ஒற்றைக் கொம்பன் யானையால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. வனப் பகுதியை விட்டு வெளியேறும் விலங்குகள் அருகிலுள்ள கிராமங்களில் நுழைந்து விளை நிலங்களைச் சேதப்படுத்துவதும், மனிதர்களைத் தாக்குவதும் அடிக்கடி நடந்து வருகிறது. இந்நிலையில், தலமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட மாவ நத்தம் கிராமத்தை ஒட்டிய வனப் பகுதியில் இருந்து நேற்று முன் தினம் இரவு ஒற்றைக் கொம்பன் யானை வெளியேறியது.

வனப்பகுதிக்கு அருகிலுள்ள சிறிய குடியிருப்பை சேதப்படுத்திய யானை, அப்பகுதியில் உள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தியது. இரவு முழுவதும் விளைநிலங்களில் யானை சுற்றிய நிலையில், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அதை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் அதிகாலை வரை அப்பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றைக் கொம்பன் யானை, அதன் பின் வனப் பகுதிக்குள் சென்றது. மாவநத்தம் பகுதிக்கு மீண்டும் ஒற்றைக் கொம்பன் யானை வரலாம் என அச்சத்தில் ஆழ்ந்துள்ள கிராம மக்கள், அதை அடர் வனப்பகுதிக்கு விரட்ட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in