

சென்னை: எண்ணூர் பாதுகாப்பு குழு சார்பில் எண்ணூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், எண்ணூர் ஈரநில சுற்றுச்சூழல் மறு சீரமைப்புக்கான மக்கள் திட்ட அறிக்கையை முன்னாள் நீதிபதிகள் எஸ்.முரளிதர், கே.கண்ணன், டி.ஹரி பரந்தாமன் ஆகியோர் வெளியிட்டனர். இந்த அறிக்கை அரசுக்கு வழிகாட்டும் என முன்னாள் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னையில் 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, வெள்ளத்தைத் தணிப்பதில் ஈர நிலங்கள் ஆற்றும் பங்கை இனம் கண்டு கொண்ட தமிழக அரசு, ‘எண்ணூர் கழுவெளியின் உயிர்ச் சூழலை மறு சீரமைக்கும் திட்டம்’ ஒன்றை அறிவித்தது. இருந்த போதும், இத்திட்டம் பலவீனமான தொலை நோக்கு கொண்டு இருப்பதாக கூறிய எண்ணூர் மீனவ மக்கள், இப்பகுதியின் உயிர்ச் சூழலை மீட்டெடுப்பதற்காக தங்களின் சொந்த மக்கள் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
எண்ணூர் கழுவெளி பாதுகாப்பு பிரச்சாரம், கடற்கரை வள மையம் போன்ற அமைப்புகளின் உதவியோடு ‘எண்ணூர் ஈர நில உயிர்ச் சூழல் மறு சீரமைப்புக்கான மக்கள் திட்டம்’ ஒன்றை உருவாக்கினர். எண்ணூர் பாதுகாப்பு குழு சார்பில் இத்திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை எண்ணூரில் நேற்று நடைபெற்றது. இதில் ஒடிசா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.முரளிதர், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.கண்ணன், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.ஹரி பரந்தாமன் ஆகியோர் பங்கேற்று அத்திட்ட அறிக்கையை வெளியிட்டனர்.
மக்கள் கோரிக்கை ஏற்பு: எண்ணூர் மணலி பகுதி, தொழில்துறை வளர்ச்சிக்காக பலியிடப்பட்ட பகுதி என்றும், தொடர்ந்து சுற்றுச்சூழலால் பாதிக்கப்படக்கூடிய பகுதி என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், உயர்மட்ட குடிமக்கள் ஆலோசகர் குழுவுக்கு தலைமை தாங்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர்.
இவர்கள், எண்ணூரின் சூழலியலுக்குப் புத்துயிர் அளிக்க சூழல், பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் பற்றிய மக்களின் ஆலோசனைகளைத் திரட்டி அரசுக்கு தெரிவிக்க உள்ளனர். தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.40 கோடி மதிப்பிலான எண்ணூர் மறு சீரமைப்பு திட்டத்தை வரவேற்ற நீதிபதிகள், உள்ளூர் சமூகங்களின் விருப்பங்களுடன் அதன் திட்டங்களை சீரமைக்க தற்போது வெளியிடப்படும் மக்கள் திட்ட அறிக்கை, அரசுக்கு வழிகாட்டும் என்றனர்.