யானைமலை அடிவாரத்தில் சாம்பல் நிற தேவாங்கு @ மதுரை

யானைமலை அடிவாரத்தில் சாம்பல் நிற தேவாங்கு @ மதுரை
Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்டம் யானைமலை அடிவாரம் ஒத்தக்கடை நரசிங்கம் பகுதியில் சாம்பல் நிற தேவாங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் யானைமலை அடிவாரம் அடர்ந்த சிறுகாடுகளை கொண்ட பல்லுயிர்கள் வாழிட பகுதியாகும். இப்பகுதியில் குரங்கு, முள்ளெலி, புனுகு பூனை, மரநாய், கீரி, அணில் உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் வசிக்கின்றன.

இந்நிலையில் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த லெட்சுமி ஜெயபிரகாஷ் என்பவர், யானைமலைப் பகுதியில் சாம்பல் நிற தேவாங்கு இருப்பதை பார்த்துள்ளார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் ஒத்தக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் பசுமை பாதுகாப்பு அறக்கட்டளையை சேர்ந்த இயற்கை ஆர்வலர், நியோ பிக்சல் ஸ்டுடியோ ஒளிப்பட கலைஞர் பிரகாஷ் நேரில் சென்று சாம்பல் நிற தேவாங்கு இருக்குமிடத்தை ஒளிப்படம் எடுத்துள்ளார்.

இது தொடர்பாக மதுரை பண்பாட்டுச் சூழலியல் பேரவையைச் சேர்ந்த தமிழ் தாசன் கூறியதாவது: யானைமலை பகுதியில் தேவாங்கு இருப்பது, முதல் முறையாக தற்போதுதான் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

சாம்பல் நிற தேவாங்கு (Gray Slender Loris) உலகில் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே காணப்படுபவையாகும். சீவக சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ மகண்மா ‘ எனும் சொல் தேவாங்கை குறிக்கும் என்று எழுத்தாளரும் ஆய்வாளருமான பி.எல்.சாமி தனது ‘சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்’ எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

காடுகள் அழிக்கப்பட்டதே தேவாங்குகளின் அழிவுக்கு முதற்காராணமாக இருக்கிறது. மருத்துவம், குறிசொல்லுதல் உள்ளிட்ட மக்களின் நம்பிக்கையாலும் தேவாங்குகள் வேட்டையாடப்படுகின்றன.

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் மதிப்பீட்டின்படி அழியும் நிலையை அடைந்த உயிரினமாக சாம்பல் நிற தேவாங்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய காட்டுயிர்கள் பாதுகாப்பு சட்டம்– 1972, பட்டியல் 1-ல் இவ்விலங்கு உள்ளது. அழியும் நிலையில் உள்ளதால் பட்டியல் 1-ல் தேவாங்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. தேவாங்குகள் மற்றும் அதன் வாழிடத்தை பாதுகாப்பது அரசு மற்றும் மக்களின் கடமையாகும். யானைமலை பகுதியில் விரிவாக ஆய்வு செய்து, பல்லுயிர்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in