ம.பி.யின் குனோ தேசிய பூங்காவில் 3 குட்டிகளை ஈன்ற நமீபிய சிவிங்கிப்புலி

ம.பி.யின் குனோ தேசிய பூங்காவில் 3 குட்டிகளை ஈன்ற நமீபிய சிவிங்கிப்புலி
Updated on
1 min read

போபால்: மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் இருக்கும் நமீபிய சிவிங்கிப்புலி ஒன்று புதிதாக மூன்று குட்டிகளை ஈன்றுயுள்ளது. இதனை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து புதிய குட்டிகளின் வீடியோ ஒன்றையையும் பகிர்ந்து அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "குனோவின் மூன்று புதிய குட்டிகள். ஜாவ்லா எனப் பெயரிடப்பட்ட நமீபிய சிவிங்கிப்புலி மூன்று புதிய குட்டிகளை ஈன்றுள்ளது. மற்றொரு நமீபிய சிவிங்கிப்புலியான ஆஷா குட்டிகள் ஈன்ற சில வாரங்களுக்குள் இந்த புதிய வருகை நிகழ்ந்துள்ளது. நாடு முழுவதிலுமுள்ள அனைத்து வனஉயிரின முன்கள பணியாளர்கள் மற்றும் வனஉயிரின காதலர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்தியாவின் வனஉயிரின வளம் செழிக்கட்டும்..." என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குனோ பூங்காவில் இருந்த சவுர்யா என்ற ஆண் சிவிங்கிப்புலி ஜன.16-ம் தேதி இறந்தது. கடந்த 2022-ம் ஆண்டு இந்தியாவில் சிவிங்கிப்புலிகள் மறு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் நிகழும் 10-வது இறப்பு சம்பவம் இது. சவுர்யாவால் சரியாக நடக்க முடியாததைத் பார்த்த கண்காணிப்பு குழுவினர் அதனைத் தனிமைப்படுத்தி,
குணப்படுத்துவதற்கு தீவிர சிகிச்சைகள் மேற்கொண்டனர். ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை. சிவிங்கிப்புலியின் இறப்புக்கான காரணத்தை உடனடியாக தெரிவிக்க முடியாது என்றும், உடற்கூராய்வுக்கு பின்னரே காரணம் தெரிய வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

முன்னதாக, ஜன.3-ம் தேதி குனோ பூங்காவில் உள்ள மற்றொரு நமீபிய சிவிங்கிப்புலி மூன்று குட்டிகளை ஈன்றது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அழிந்து போன சிவிங்கிப்புலிகளை இங்குள்ள காடுகளுக்கு மறு அறிமுகம் செய்யும் வகையில் சிவிங்கிப்புலிகள் திட்டத்தின் கீழ் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி ஆப்பிரிக்காவின் நமீபியாவில் இருந்து ஜாவ்லா உட்பட 8 சிவிங்கிப்புலிகள் குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in