

தருமபுரி: மேட்டூர் அணையின் நீர்தேங்கும் பகுதியில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாய தேவைக்கு வழங்கி அணையின் கொள்ளளவை அதிகப் படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
ஸ்டான்லி நீர்த் தேக்கம் என அழைக்கப்படும் மேட்டூர் அணை சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கான பிரதான நீராதாரம் கேரளா, கர்நாடகா வனப்பகுதிகள் தான். இப்பகுதியில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் பெய்யும் மழை மூலம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகள் நிரம்பி தமிழகத்தை நோக்கி வரும் காவிரி வெள்ளம் மேட்டூர் அணையையும் நிறைக்கிறது.
அணை உருவான வரலாறு: கனமழை மற்றும் புயல் மழை காலங்களில் காவிரியாற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விளை நிலங்களில் ஏற்படும் பெரும் சேதங்களை தவிர்க்கும் நோக்கத்துடன் கடந்த 1800-ம் ஆண்டுகளில் மேட்டூர் பகுதியில் அணை கட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அன்றைய மைசூரு சமஸ்தானம் சார்பில் கிளம்பிய எதிர்ப்பு 1925-ம் ஆண்டு வரை 125 ஆண்டுகள் தமிழகத்தில் காவிரியாற்றின் குறுக்கே அணை கட்ட முடியாத படி தடை ஏற்படுத்தி வந்தது.
பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் 1925-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த அணை கட்டும் பணி தொடங்கியது. ரூ.4.80 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட மேட்டூர் அணை 1934-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. 124 அடி உயரம் கொண்ட இந்த அணைக்கட்டில் 120 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. கடந்த 2022-23-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் மேட்டூர் அணை முழுமையாக நிரம்பியது. ஆனால், 2023-24-ம் ஆண்டில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரவில்லை. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70 அடியாக உள்ளது.
வண்டல் அகற்ற கோரிக்கை: இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்தேங்கும் பகுதியில் படிந்துள்ள வண்டல் மண்ணை வேளாண் தேவைகளுக்காக வழங்குவதன் மூலம் விவசாயமும் செழிக்கும், அணையின் நீர் கொள்ளளவும் அதிகரிக்கும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நடராஜன் கூறியது: மேட்டூர் அணையின் நீர் தேங்கும் பகுதி, சேலம் மாவட்டம் மேட்டூர் முதல் தருமபுரி மாவட்டம் நாகமரை வரை 59.25 சதுர மைல் பரப்பளவு கொண்டதாக உள்ளது. இந்த அணையில் 1934-ம் ஆண்டு முதல் முதலாக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. அப்போது முதல் கடந்த 2017-ம் ஆண்டு வரை மேட்டூர் அணை நீர் தேங்கும் பகுதியில் படிந்த வண்டல் அகற்றப் படவே இல்லை. இந்நிலையில், 83 ஆண்டுகளுக்கு பின்னர் 2017-ம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு விவசாயிகளுக்கு வண்டல் மண்ணை இலவசமாக வழங்கியது.
இருப்பினும், ஓரிரு வாரங்களில் தொடங்கிய மழை காரணமாக அப்போது அணையின் நீர் தேங்கும் பரப்பில் தேங்கிய வண்டல் முழுமையாக அகற்றப் படவில்லை. கடந்த ஆண்டு போதிய மழைப்பொழிவு இல்லாததால் அணையில் குறைந்த அளவிலேயே தண்ணீர் உள்ளது. மீண்டும் மழைக் காலம் தொடங்கவும் சுமார் 4 மாதங்கள் உள்ளன. எனவே, அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அணையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் பணியை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும். இதன் மூலம், அணையின் நீர் தேங்கும் பகுதி அதிகரித்து வரவிருக்கும் மழைக் காலத்தில் கூடுதலாக தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்தலாம். இவ்வாறு கூறினார்.