மேட்டூர் அணை உபரிநீர் போக்கி பகுதியில் பச்சை நிறமாக மாறியுள்ள தண்ணீர்.
மேட்டூர் அணை உபரிநீர் போக்கி பகுதியில் பச்சை நிறமாக மாறியுள்ள தண்ணீர்.

மேட்டூர் அணை உபரிநீர் போக்கி பகுதியில் கழிவுநீர் கலந்ததால் நிறம் மாறிய தண்ணீர்

Published on

மேட்டூர்: மேட்டூர் அணை உபரிநீர் போக்கியில் கழிவுநீர் கலந்ததால் தண்ணீர் பச்சை நிறமாக மாறியது.

மேட்டூர் அணையில் வெள்ளப் பெருக்கு காலங்களில் 16 கண் மதகுகளில் இருந்து வெள்ள உபரி நீர் வெளியேற்றப் படுகிறது. இந்த பகுதியில் ஏராளமான பள்ளங்கள் இருப்பதால் எப்போதும் தண்ணீர் இருக்கும். அதேபோல, மீன்கள் அதிகளவில் இருப்பதால் மீனவர்கள் மீன்களை பிடித்து வருகின்றனர். இதனிடையே, அருகிலுள்ள பகுதிகளிலும் இருந்தும், சிட்கோவில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேறும் கழிவுநீர், கால்வாய் வழியாக வெள்ள உபரிநீர் போக்கி செல்லும் பகுதியில் கலந்து விடுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி, சிட்கோவில் உள்ள தொழிற்சாலை களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, அங்கிருந்த ரசாயனம் கலந்த கழிவுநீர் வெள்ள உபரிநீர் போக்கியில் கலந்தது. இதன் காரணமாக, உபரிநீர் போக்கியில் தேங்கியிருந்த தண்ணீர் பச்சை நிறமாக மாறியது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வீரக்கல்புதூர், பி.என்.பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் சிட்கோவில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வெள்ள உபரிநீர் போக்கியில் கலக்கிறது. இதைத் தடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், இங்கிருந்து தான் குடிநீர் நீரேற்று நிலையங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. எனவே, கழிவுநீர் கலப்பால் பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும், என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in