

அரியலூர்: வட தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் சில மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா உத்தரவிட்டார். அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், திருமானூர், தா.பழூர், ஆண்டிமடம் என பல்வேறு பகுதிகளிலும் நாள் முழுவதும் அவ்வப்போது மழை பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த மழையின் காரணமாக ஆண்டிமடத்தை அடுத்த குளத்தூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேருடன் சாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): ஜெயங்கொண்டம் 95, சித்தமல்லி அணை 77.2, திருமானூர் 53.2, செந்துறை 49, அரியலூர் 48.8, தா.பழூர் 41.6, குருவாடி 46, ஆண்டிமடம் 13.