அரூர் பகுதி நீர் நிலைகளில் வேகமாக குறைந்து வரும் நீர்மட்டம் - விவசாயம் பாதிக்கும் அபாயம்

கடந்தாண்டு நிரம்பி காணப்பட்ட அரூர் பெரிய ஏரி தற்போது நீர் மட்டம் வேகமாக குறைந்து கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறிவருகிறது.
கடந்தாண்டு நிரம்பி காணப்பட்ட அரூர் பெரிய ஏரி தற்போது நீர் மட்டம் வேகமாக குறைந்து கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறிவருகிறது.
Updated on
1 min read

அரூர்: அரூர் பகுதியில் கடந்தாண்டு போதிய மழையில்லாததால் நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் மேட்டுப் பாங்கான நிலப்பகுதி மிகுதியாகவும், நீர்ப்பாசனம் பெறும் நிலப் பகுதி குறைவாகவும் அமைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் சரியான பருவங்களில் மழை பெய்ததால் பெரும்பாலான நீர் நிலைகளில் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்திருந்தது. இதன் காரணமாக விவசாயம் மற்றும் குடிநீருக்கான தேவை பூர்த்தி செய்யப்பட்டது. இது தவிர அரூர் பகுதியைச் சுற்றியுள்ள வறட்டாறு மற்றும் வள்ளி மதுரை அணைகள் முழுமையாக நிரம்பி இருந்தன. இதன் காரணமாக அணையில் இருந்து பாசனத்துக்கும், கால்வாய்கள் மூலம் பல்வேறு ஏரிகளுக்கும் நீர் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்தாண்டு போதிய அளவில் சரியான பருவ காலத்தில் மழை பெய்ய வில்லை. இதனால் ஏரி, குளம், கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் வேகமாக குறையத் தொடங்கியுள்ளது. போதிய மழை இல்லாததால் வறட்டாறு மற்றும் வள்ளி மதுரை அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டம் பாதிக்கும் குறைவாகவே உள்ளது. இதனால் பாசனத்துக்கு நீர் திறப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக அரூர் பகுதியில் பெய்யும் மழையின் அளவு சராசரியாக ஆயிரம் மி. மீட்டராக இருந்தது. ஆனால் தற்போது 900மி.மீட்டராக குறைந்துள்ளது. இதனால், கடந்த சில ஆண்டுகளாக ஜனவரி மாதத்தில் நிரம்பி காணப்பட்ட தென்கரைக் கோட்டை ஏரி, பறையப்பட்டி ஏரி, ஆலாபுரம் ஏரி, அரூர் பெரிய ஏரி உள்ளிட்டவற்றில் தற்போது 30 சதவீதத் திற்கும் கீழாக நீர்மட்டம் உள்ளது. இதுவும் வேகமாக குறைந்து வரும் நிலையில் இவ் வாண்டு முழுமையாக வறண்டு போகும் சூழல் உள்ளது. இதனால் விவசாயம்பெரும் பாதிப்பை சந்திக்கும் வாய்ப்பும் உள்ளது.

இந்நிலையை தவிர்க்க நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், கால்வாய்களை தூர் வாரி சீரமைக்கவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயி குமரன் கூறுகையில், கடந்த இரு ஆண்டுகளாக குறைந்துவரும் மழையால் அரூர் பகுதியில் பெரும்பாலான ஏரிகள் மற்றும் குளம், குட்டைகள் மற்றும் கிணறுகளில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் நீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் விவசாயிகள் நீர் அதிகம் தேவைப்படும், நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட முன் வரவில்லை. அதிக நீர் தேவைப்படாத மரவள்ளிக் கிழங்கு பயிருக்கு மாறிவிட்டனர், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in