

தெ
ன் மாவட்டங்களில் உள்ள கன்னி நாய்களைச் சற்று கவனத்துடன் பார்த்தால், அவற்றில் பொடித்தலை நாயும் உண்டு, பருத்த தலை நாயும் உண்டு, சங்கு தலை நாயும் உண்டு என்பது தெரியும். ஒவ்வொரு குழுக்களுக்குமிடையேகூட கன்னி நாயின் உருவம் மற்றும் அவற்றின் குணங்களும் மாறுபடும்.
இதற்கு இரண்டு காரணங்களை முன்வைக்கலாம். ஒன்று, முதற்கட்டமாக, நாயக்கர்கள் வருகையின் போது வந்த பாரசீகத்து வேட்டைநாய்களும், பின்னர் இறக்குமதியான ‘கிரே ஹவுண்ட்’ மற்றும் ‘ஸ்லோகி’ என அனைத்து நாய் இனங்களும் கொண்டும் கொடுத்தும் உருவான இனம், ஒற்றைத் தன்மையில் வராது.
இரண்டாவதாக, ஆரம்பக் காலத்தில் மிக அரிதாக இருந்த இந்த நாய் இனத்தைப் பெற்ற மக்கள், தங்களின் தேவையின் பொருட்டு இதை கலப்பினம் மற்றும் உள்ளினச் சேர்க்கை போன்ற வழிகளில் இனவிருத்தி செய்தனர். இதுவே இந்த நாய்கள் உருவாகி வந்த கதை! கன்னி நாய்களின் அழிவு என்பது, இவற்றை மறுப்பதிலிருந்து தொடங்குகிறது!
தமிழகத்து நாய் இனங்கள் அத்தனையும் ‘ஹவுண்ட்ஸ்’ என்கிற வரையறையில்தான் வருகின்றன. அவை நீடித்துவரக் காரணம், சிறு மாறுபாடுகளுடன் கூடிய பன்முகத்தன்மைதான்.
கடந்த ஐந்தாறு வருடங்களாக சமூக வலைத்தளங்களில், மிக அதிக அளவில் நாய்களைப் பற்றிய அறிமுகம் அதிகமாக வருவதுபோல் அமைந்தாலும், மிக மிக மேம்போக்கான புரிதலைத்தான் தருகின்றன. இதில் உள்ள எண்ணற்ற பதிவுகள், தென்மாவட்டத்தைச் சாராத, வேட்டை நாய்களைப் பற்றிய பரிச்சியம் இல்லாதவர்களால் பதிவேற்றப்படுகின்றன.
அவர்களுடைய நோக்கம் நல்லது என்றபோதும், நாய்களின் தோற்ற அமைப்புப் பற்றிய புரிதல் இன்மையின் காரணமாக, பல தோற்றக் கூறுகளை உடைய கன்னி நாய் இனத்தைக் கணக்கில் கொள்ளாது ஒற்றைத் தன்மையிலான வரையறையைச் சுட்டி, அதை எந்த நாய் இனங்கள் பூர்த்தி செய்கின்றனவோ அவையே நாட்டு நாய்கள் என்ற விதத்தில் பதிவு செய்யத் தொடங்கினர்.
இதுபோன்ற பதிவுகள், மிகக் கணிசமான தொகையில் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இது பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாய் இனத்தைக் குறுகலான வட்டத்துக்குள் அடைத்து, ஒரே மாதிரியான உருவ அமைப்புடைய நாய்களை ஊக்குவித்து, அவற்றினுடைய சிறப்பான பண்புகளை அழித்து, அச்சில் வார்த்து எடுக்கப்பட்ட ஒரு பொம்மையை உருவாக்கும் முயற்சியைப் போன்றது!
(அடுத்த வாரம்: மறக்கப்படும் வரலாறு!)
கட்டுரையாளர், நாட்டு நாய்கள் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com