

புவனேஸ்வர்: ஒடிசாவில் காணப்படும் அரிய வகை கரும் புலிகளின் புகைப்படங்களை வனத்துறை அதிகாரி வெளியிட்டார்.
ஒடிசா மாநிலத்தில் சிமிலிபால் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இது புலிகள் சரணாலயம் ஆகும். கடந்த 2022-ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் அங்கு 16 புலிகள் இருப்பது தெரிய வந்தது. இதில் 10 புலிகள், அரிய வகை கரும்புலிகள் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. இந்த சூழலில் ஒடிசாவின் சிமிலிபால் தேசிய பூங்காவில் காணப்படும் கரும்புலிகளின் புகைப்படங்களை மத்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இவை இந்தியாவின் கரும்புலிகள். மரபணு மாற்றத்தால் பிறந்த இவை மிக அரிய வகையைச் சேர்ந்தவை. மிக அழகான விலங்கினம்’’ என்று தெரிவித்துள்ளார்.
அகவுடி என்ற நிறமி மாற்றத்தால் புலிகளின் உடலில் கருப்பு வரிகள் உருவாகின்றன. இதன் காரணமாக இவை கரும் புலிகள் என்றழைக்கப்படுகின்றன. ஒடிசா தலைநகர் புவனேஸ்வர், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி, தமிழக தலைநகர் சென்னை வண்டலூரில் அமைந்துள்ள வன விலங்கு சரணாலயங்களில் இதுபோன்ற அரிய வகை கரும்புலிகள் இருக்கின்றன.