

கோவை: கோவை அவிநாசி சாலையில் பீளமேடு பகுதி அதிக போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இங்கு சாலையோரம் கட்டப்பட்டுள்ள சாக்கடை கால்வாய் மண் மூடி கிடப்பதால், அவிநாசி சாலையில் கழிவுநீர் வெளியேறி மக்கள் அல்லல்படுகின்றனர். சென்னை, சேலம், ஈரோடு உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து கோவை மாநகருக்குள் நுழைவதற்கான பிரதான 6 வழிச்சாலை இவ்வாறு கழிவுநீர் சாலையாக மாறியிருப்பது மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.
இதுகுறித்து பீளமேடு பகுதியைச் சேர்ந்தவரும், சமூக செயல்பாட்டாளருமான வெள்ளியங்கிரி கூறியதாவது: கடந்த 2010-ம் ஆண்டு கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடந்தது. அந்த மாநாட்டையொட்டி அவிநாசி சாலை விரிவுபடுத்தப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்லும் கால்வாய் கட்டப்பட்டது. அதன்படி, பீளமேடு விளாங்குறிச்சி சாலை பிரிவிலிருந்து ஃபன்மால் சந்திப்பு வரை ஏறத்தாழ 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. சாலையின் மட்டத்துக்கு ஏற்ப நாலரை அடி உயரம், இரண்டரை அடி அகலத்தில் இந்த வடிகால் கட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர், இந்த வடிகால் சரிவர தூர்வாரி புனரமைக்கப்படவில்லை.
இந்த வடிகால் முழுவதும் மண்கழிவுகளால் நிறைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் கால்வாயில் செல்ல வழியின்றி அவிநாசி சாலையில் பயனீர்மில் சாலை பிரிவு உள்ளிட்ட இடங்களில் குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பல வருடங்களாக இப்பிரச்சினை உள்ளது. மழைநீர் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. புதிய மழைநீர் வடிகால் கட்டித் தருகிறோம் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால், தொடர்ந்து தாமதம் ஆகிறது. கல்வி நிலையங்களுக்கு செல்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர்.
வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். அவிநாசி சாலையில் பாலம் கட்டும் பணியும் தீவிரமடைந்துள்ளதால், இங்கு மழைநீர் வடிகால் சீரமைப்பு அல்லது புதுப்பித்து கட்டும் பணியை விரைவில் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘அவிநாசி சாலையில் மேற்குறிப்பிட்ட பகுதியில் மின்கம்பங்கள், மின்சார பெட்டிகள் உள்ளன. இவற்றை இடம் மாற்ற மின்வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மாற்றப்பட்ட பின்னர், பீளமேடு பகுதி உட்பட உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை இருபுறங்களிலும் தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் புதுப்பித்து கட்ட திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றனர்.