வளம் சேர்க்கும் வேளாண் பொருட்கள்!

வளம் சேர்க்கும் வேளாண் பொருட்கள்!
Updated on
2 min read

ரி கயிறு, தாம்புக் கயிறு, வட கயிறு, கருக்கருவா, வாங்கருவா, மரக்கா, படி, மோத்தடி களவெட்டு, பரம்பு செட்டு, ஒலவாரம், மட்டப்பலக, தாருகுச்சி, கடமலக்குச்சி, பூட்டாத்தல, உலக்கை, உரலு … இவையெல்லாம் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் தளவாடப் பொருட்கள் என்பது இக்காலத் தலைமுறையினர் அறியாதது. மேற்குறிப்பிட்ட பொருட்களில் களவெட்டு, கருக்கருவா தவிர மற்றதெல்லாம் புழக்கத்தில் இல்லை. இப்படி விவசாயிகளிடமிருந்தே விலகிச் சென்றுவிட்ட பொருட்களில் குதிர், பத்தாயம் போன்ற தானியக் களஞ்சியங்களும் அடங்கும்.

இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தானிய சேமிப்புக் கிடங்கு இருப்பதைப் போல, நம் முன்னோர்கள் நெல், கம்பு, கேழ்வரகு, சாமை உள்ளிட்ட உணவு தானியங்களை வீட்டிலேயே சேமித்து வைக்க பத்தாயம், குதிர் போன்றவற்றைப் பயன்படுத்தினர்.

35 ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமப்புறங்களில் மட்டுமில்லாது, பெருநகரங்களிலும் பெரும்பாலான வீடுகளில் பத்தாயம், குதிர் உள்ளிட்டவை பயன்பாட்டில் இருந்தன. இவற்றின் மகத்துவம் அறிந்த விவசாயிகள் சிலர் இன்றும் சில குக்கிராமங்களில் குதிர், பத்தாயத்தைப் பயன்படுத்துகின்றனர்.

மேற்கண்ட பொருட்களை, கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை அடுத்த முத்தணங்குப்பம், முத்தாண்டிக்குப்பம், குருவங்குப்பம், பேர்பெரியான்குப்பம், ஆலடி, மணக்கொல்லை, பாலக்கொல்லை போன்ற குக்கிராமங்களில் இன்றும் ஒருசிலர் பயன்படுத்தி வருகின்றனர்.

முத்தணங்குப்பத்தைச் சேர்ந்த அன்னம்மாவிடம் பேச்சுக் கொடுத்தபோது, “இந்தப் பக்கத்துல பத்தாயத்தை தொம்பன்னுதான் சொல்வாங்க. மண் தொம்பை, மரத் தொம்பன்னு பேரு. நான் சின்னப் பொண்ணா இருக்கும்போது எங்கப்பா செஞ்சதுதான் இந்த மண் தொம்பை. இதுல நெல் வெச்சுக்குவோம், கம்பு, கேழ்வரகு கொட்டி வைச்சுக்குவோம், வேணுங்கிறபோது எடுத்து உரல்ல போட்டு இடிச்சி, சமைச்சி சாப்பிடுவோம். இப்ப எல்லாம் யாரும் அப்படிச் செய்யறதில்லை” என்றார்.

முத்தாண்டிக்குப்பத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் உதயராசு “அப்பெல்லாம் வீட்டுக்கு வீடு தொம்பை இருந்தது. இப்ப வீட்டுக்கு வீடு தொப்பைதான் இருக்கு” என்றவர், பத்தாயம் செய்யும் முறை குறித்து விளக்கினார்.

20chnvk_udayarasu.JPG உதயராசுright

“பெரும்பாலும் மாம்பலகை, பலாப்பலகையிலதான் பத்தாயம் செய்வார்கள். இது சதுரம் அல்லது செவ்வகம் என இரண்டு வடிவங்களில் 10 முதல் 12 அடிவரை உயரம் கொண்டதாக இருக்கும். தனித்தனி அடுக்குப் பெட்டிகளாச் செய்து ஒன்றன் மீது ஒன்றாக அடுக்க வேண்டும்.இதற்கான காரணம், நம்மை வியக்க வைக்கிறது. பல அடி உயரம் கொண்ட பத்தாயத்தின் உச்சத்துக்குச் சென்று அனைத்து மூட்டைகளையும் அவிழ்த்து நெல்லைக் கொட்டுவதென்பது எளிதானதல்ல.

எனவே ஒவ்வொரு அடுக்காக வைத்து நெல்லை நிரப்பிக் கொண்டே வந்தால் மிக எளிதாக வேலை முடியும். மேல் மட்டத்தில், மூடித் திறக்கும்படியான கதவு ஒன்று இருக்கும். அடிப்பகுதியில் சின்னதாக ஒரு துவாரம் இருக்கும். அதன் வழியாகத் தேவையான அளவு கம்பையோ, கேழ்வரகையோ எடுத்துக்கொள்ளலாம். இரண்டு வழியிலேயும் பூட்டுப் போட்டு பூட்டிக் கொள்ளும் வசதி இருக்கும்.இவற்றில் ஒரு வருடத்துக்குத் தேவையான நெல்லைக் கொட்டி வைத்துக்கொள்ளலாம்” என்றார்.

“குதிர்களைப் பொறுத்தவரை , அவை மண்ணால் ஆன உறைகளைக் கொண்டு செய்யப்பட்டவை. களிமண், வரகு வைக்கோல் இரண்டையும் சேர்த்து இதைச் செய்வார்கள். சுமார் ஆறு அடி உயரத்துக்குக் குதிர் செய்யலாம். ஒரு உருளைக்கும் அதன் மீதுள்ள இன்னொரு உருளைக்கும் இடையே உள்ள இடுக்குகளில் சேறு பூசப்படும். அனைத்து உருளைகளும் அமைக்கப்பட்ட பிறகு அதன் மீது முழுமையாக சாணம் பூசப்படும்.மேல் மட்டத்தை மூடுவதற்குப் பிரம்பால் தட்டு போன்ற வட்டமான மூடியைச் செய்வார்கள். இதனால் எலி கடிக்காது. அவ்வப்போது தேவைக்கேற்பக் கொஞ்சம் கொஞ்சமாக நெல்லை வெளியில் எடுக்க, குதிரின் கீழ்ப் பகுதியில் திறந்து மூடுவதற்குத் தேங்காய்ச் சிரட்டையையும் மண்ணையும் வைத்து மூடிப் பயன்படுத்துவார்கள்” என்றார் மணக்கொல்லை கிராமத்தைச் சேர்நத முருகன்.

வேளாண்மையை மட்டுமல்ல… வேளாண் பொருட்களையும் போற்றுவோம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in