

மதுரை: சமூக ஆர்வலர் ஒருவர் பனை மரம் விதையில் கிறிஸ்துமஸ் பொம்மைகளை தயார் செய்து, அதனை தனக்கு தெரிந்த கிறிஸ்தவ நண்பர்களுக்கு வீடு தேடிச் சென்று வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தங்கள் வீடுகளில் குடில்கள் அமைத்து ஸ்டார்கள், அலங்கார விளக்குகளை தொங்கவிட்டு கிறிஸ்தவர்கள் அலங்காரிப்பார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகளை குழந்தைகளுக்கு வழங்கி மகி்வார்கள். இந்த பண்டிகை கொண்டாட்டத்துக்கு அலங்காரத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளது. அவற்றை தவிர்க்கும்வகையில் கிறிஸ்தவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலரான க.அசோக் குமார், பனை மரவிதையில் கிறிஸ்துமஸ் பொம்மைகளை தயார் செய்து, நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக அதனை வீடு தேடிச்சென்று வழங்கி வருகிறார். அசோக் குமார் விதைப்பந்து தூவுதல், பிளாஸ்டிக் விழிப்புணர்வு போன்ற சுற்றுச்சூழல் சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேரத்தில் பனை மரம் விதையில் இதுபோல், விநாயகர் பொம்மைகளை தயார் செய்து விழிப்புணர்வு செய்து வந்தார்.
தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம் தேதி கொண்டாடும்நிலையில், கிறிஸ்தவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் 100 சதவீதம் பிளாஸ்டிக் இல்லாத பரிசு பொருட்களுடன் நண்பர்களுக்கு வாழ்த்து சொல்ல அசோக் குமார் முடிவெடுத்துள்ளார். அதற்காக, பனை மரம் விதையில் அழகான கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகளை தயார் செய்து, தன்னை சுற்றி வசிப்பவர்கள், நண்பர்களுக்கு வழங்கி வருகிறார்.
இதுதொடர்பாக அசோக் குமார் கூறுகையில், ‘‘நமது தமிழ் மொழியின் சங்ககாலம் தொட்டு பனை ஓலையில் சுமந்து வந்த மரம் தனது உச்சி முதல் வேர் வரை மனிதனுக்கும் இயற்கைக்கும் பயன் தரும் மரம் நமது மாநில மரமுமான பனைமரம் தற்போது அழிவின் இறுதியில் உள்ளது. பனை மரத்தினை நமது அடுத்த தலைமுறையினரின் நலனுக்காக காத்திட வேண்டியது நமது கடமை. பனை மரத்தினை பாதுகாத்திடும் நோக்கில் பல இடங்களில் பனை விதைகளை நாம் நடவுசெய்து வந்தாலும், பொது மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே பனை விதைகள் நிறைய நடவுசெய்து பனை மரங்களை உருவாக்கிட இயலும்.
அந்த முயற்சியில் பனை மரத்தின் மீது சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் நம் முன்னோர்கள் நம்மிடம் கொடுத்துசென்ற பனை விதையில் பொம்மை செய்யும் முயற்சியில் தாத்தா பொம்மை மட்டுமின்றி பல்வேறு உருவங்கள் உருவாக்கி வருகிறேன். பனை மரத்தை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகளை பனை விதையில் தயார் செய்து வழங்கி வாழ்த்து சொல்லி வருகிறேன்’’ என்றார்.