தீர்த்தமலை அருகே சுற்றித் திரியும் ஒற்றை நரியால் கிராம மக்கள் அச்சம்

தீர்த்தமலை அருகே சுற்றித் திரியும் ஒற்றை நரியால் கிராம மக்கள் அச்சம்
Updated on
1 min read

அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை அருகே சாலையோரம் சுற்றித் திரியும் ஒற்றை நரியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அரூர் - திருவண்ணாமலை சாலையில் தீர்த்தமலையைக் கடந்து சற்று தூரத்தில் வனப்பகுதியை ஒட்டி சாலையோரத்தில் கடந்த சில நாட்களாக ஒற்றை நரி ஒன்று சுற்றி வருகிறது. இந்த நரியால் சுற்று வட்டார விவசாய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் ஆடுகள், பசுங்கன்றுகள், கோழிகள் போன்றவற்றுக்கு ஆபத்து ஏற்படலாம் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே, அந்த நரியை அடர் வனப்பகுதிக்குள் இடம் பெயரச் செய்ய தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது பற்றி அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறியது: தீர்த்தமலை - திருவண்ணாமலை சாலையில் தீர்த்தமலையில் இருந்து சற்று தூரத்தில் சாலையையொட்டியுள்ள வனப் பகுதியில் நரி ஒன்று கடந்த சில நாட்களாக சுற்றித்திரிகிறது. சில நேரங்களில் இந்த நரி சாலைக்கும் வருகிறது. அவ்வப்போது சாலையை கடந்தும் செல்கிறது. விவசாயிகள் பலரும் வாழ்வாதாரத்துக் காக கோழிகள், ஆடுகள் போன்றவற்றை வளர்க்கிறோம்.

இவற்றை வீட்டின் அருகில் திறந்தவெளியில் தான் கட்டியும் அடைத்தும் வைக்கிறோம். பகலில் மேற்கொள்ளும் கடுமையான உழைப்பின் அசதி காரணமாக இரவில் நன்றாக உறங்கிவிடுகிறோம். இதுபோன்ற நேரங்களில் கால்நடைகளை நரிகள் வேட்டையாட வாய்ப்புள்ளனது. எனவே, சாலையோரம் சுற்றும் ஒற்றை நரி உட்பட இப்பகுதியில் உள்ள நரிகளை கண்டறிந்து அவை அடர்வனப் பகுதிக்குள் செல்லும் வகையிலான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு விவசாயிகளின் அச்சத்தை போக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in