அலை வேகத்தை தடுக்க அலையாத்தி காடுகள்: மணமேல்குடி அருகே மீன் முள் வடிவில் அமைகிறது!

அலை வேகத்தை தடுக்க அலையாத்தி காடுகள்: மணமேல்குடி அருகே மீன் முள் வடிவில் அமைகிறது!
Updated on
1 min read

புதுக்கோட்டை: கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் அலையாத்தி காடுகளை உருவாக்குவதற்காக மீன் முள் வடிவில் வாய்க்கால் அமைத்து அலையாத்தி விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிப்பதற்காக பசுமைத் தமிழகம் திட்டம் எனும் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன்படி, வனத் துறை மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி அருகே கடற்கரை ஓரத்தில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு மீன் முள் வடிவில் வாய்க்கால் அமைத்து, அலையாத்தி மரங்களின் விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கடல் வளம் பாதுகாக்கப்படும் என வனத் துறையினர் கூறுகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் கூறியது: கல்லணைக் கால்வாயின் கடைமடை நீர்நிலையாக இருப்பது மும்பாலை ஏரி. இந்த ஏரி நிரம்பினால் அங்கிருந்து கடலுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். இந்நிலையில், கடலில் மும்பாலை முகத்துவார பகுதியில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு தடுப்புகள் ஏதும் இல்லாததால் புயல், வெள்ள காலத்தில் கடல் நீர் கரைக்கு வருகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கும், மீனவர்களுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது. இதைத் தடுப்பதற்காக அலையாத்திக் காடுகளை உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக கடல் நீர் வந்து செல்லும் வகையில் அகன்ற வாய்க்காலும், அதற்கடுத்து பக்கவாட்டில் மொத்தம் 8,500 மீட்டர் தொலைவுக்கு 93 கிளை வாய்க்கால்களும் மீன் முள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.

மும்பாலை கடற்கரை பகுதியில் அலையாத்திக் காடு உருவாக்குவதற்காக<br />மீன் முள் வடிவில் வாய்க்கால் அமைத்து விதைக்கப்பட்டுள்ள அலையாத்தி மரவிதை.<br />படம்: கே.சுரேஷ்
மும்பாலை கடற்கரை பகுதியில் அலையாத்திக் காடு உருவாக்குவதற்காக
மீன் முள் வடிவில் வாய்க்கால் அமைத்து விதைக்கப்பட்டுள்ள அலையாத்தி மரவிதை.
படம்: கே.சுரேஷ்

இந்த வாய்க்கால்களின் ஓரங்களில் ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் சேகரிக்கப்பட்ட 44,100 அலையாத்தி மர விதைகள் அண்மையில் விதைக்கப்பட்டுள்ளன. அவை தற்போது முளைத்துள்ளன. முளைக்காத இடங்களில் மீண்டும் விதை விதைக்கப்படும். வனத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் காடு உருவானால், கரையில் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படும். கடற்கரை ஓரங்களில் மண் அரிப்பு தடுக்கப்படும். கடலுக்கு அருகில் நிலத்தடி நீரில் கடல் நீர் ஊடுருவல் தடுக்கப்படும். இயற்கை சீற்றங்களின்போது கடல் அலையின் வேகத்தைத் தடுத்து கடற்கரையையும், மக்களையும் பாதுகாப்பது உறுதி செய்யப்படும். பறவைகள், நண்டு உள்ளிட்ட உயிரினங்கள் பெருகும். குறிப்பாக, இதன்மூலம் உயிர்ச்சூழல் பாதுகாக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in