கண்ணமங்கலம் அடுத்த காந்தி நகர் ஏரியில் வெள்ளை விளக்குகளாக மரக்கிளையில் கொக்குகள்!

கண்ணமங்கலம் அருகே காந்திநகர் ஏரியில் அமர்ந்துள்ள கொக்குகள்.
கண்ணமங்கலம் அருகே காந்திநகர் ஏரியில் அமர்ந்துள்ள கொக்குகள்.
Updated on
1 min read

திருவண்ணாமலை: கண்ணமங்கலம் அருகே காந்திநகர் ஏரியில் வெள்ளை விளக்குகளை போன்று மரக்கிளைகளில் கொக்குகள் அமர்ந்துள்ளது காண்போரை ரசிக்க வைக்கிறது.

பறவைகளை ரசிக்க ஆயிரம் கண்கள் போதாது என்பர். இவைகளின் ஒலி ஒசையானது, மனதுக்கு அமைதியை கொடுக்கும். இதனால், பறவைகளின் சரணாலயத்தை தேடி மக்கள் செல்கின்றனர். இதற்கு, அடுத்தபடியாக கிராமங்களில் உள்ள நீர் நிலைகளில், ‘உள்ளூர் பறவைகள்’ வருகையும் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் - சந்தவாசல் சாலையில் ( சித்தூர் - கடலூர் தேசிய நெடுஞ்சாலை ) வாழியூர் அடுத்த காந்தி நகர் ஏரி நிரம்பி உள்ளது. இதனால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதன் எதிரொலியாக, உள்ளூர் பறவையான கொக்கு அதிகளவில் வந்து செல்கின்றன. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளதால், வாகன ஓட்டிகள் ரசித்துவிட்டு செல்கின்றனர்.

இது குறித்து இயற்கை ஆர்வலர் முனைவர் அமுல்ராஜ் கூறும்போது, “நமது உள்ளூர் பறவையான கொக்குகளின் வருகை காந்தி நகர் ஏரியில் அதிகளவில் உள்ளன. மரக்கிளைகளில் அவை அமர்ந்துள்ளதை பார்க்கும்போது, வெள்ளை விளக்குகளை போல் காட்சி தருகிறது. சித்தூர் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையின் அருகே ஏரி உள்ளதால் காண்போரை இக்காட்சி ரசிக்க வைக்கின்றன.

புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங் களில் பெய்யும் பருவமழை காலத்தில் கொக்குகள் குவிகின்றன. இக்கொக்குகள் யாவும் நம் ஊர் பகுதிகளில் வசிக்கும் சுதேசி பறவைகள். ஏரி நிரம்பும்போது, உணவுக்காக நிரந்தரமாக தங்குகின்றன” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in