ஒளிரும் காளான்கள் எனும் இயற்கை அதிசயம்!

ஒளிரும் காளான்கள் எனும் இயற்கை அதிசயம்!
Updated on
2 min read

கோவை: இயற்கையின் அதிசயங்களில் ஒளி உமிழும் காளானும் ஒன்று. உலகில் சுமார் 103 வகையான ஒளி உமிழும் காளான்கள் உள்ளன. இதில் 7 வகைகள் இந்தியாவில் காணப்படுகின்றன. இந்த வகை காளான்களின் வித்துகள், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பரவுவதற்கு உதவும் பூச்சிகளையும், ஏனைய உயிரினங்களையும் கவர்வதற்காக ஒளி உமிழும் தன்மையை பெற்றிருக்கின்றன.

இவ்வகையான காளான்களில் நடைபெறும் வேதியியல் மாற்றத்தின் விளைவால் ஏற்படும் அதிகப்படியான ஆற்றல் இளம் பச்சை ஒளியாக வெளியேறுகிறது. இதுவே அக்காளான்களின் திசுக்களை ஒளிரவைக்கிறது. இந்நிலையில், தமிழகத்தின் கன்னியாகுமரி வன உயிரின சரணாலய பகுதியில் வனத்துறையினருடன் இணைந்து ஆய்வுக்காக சென்ற குழுவினர், ஒளிரும் காளான்களை புகைப்பட பதிவு செய்துள்ளனர்.

இந்த ஆய்வு பயணத்தில் பங்கேற்ற கன்னியாகுமரி இயற்கை அறக்கட்டளையின் நிறுவனர் வினோத் சதாசிவன் கூறும்போது “இந்த வகை காளான்கள் தங்கள் விதை பரவலுக்கு உதவும் வகையில், பூச்சிகளை ஈர்ப்பதற்காகவே ஒளிரும் தன்மையை பெற்றிருக்கின்றன. மற்ற காளான் வகைகளைப் போலவே இந்த வகை காளான்களும் பருவ மழைக்காலத்தில் மட்டுமே தென்படும் என கேள்விப்பட்டு, பழங்குடியின மக்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரித்தோம்.

அப்போது, இதுபோன்ற ஒளிரும் காளான்களை வனத்துக்குள் பார்த்துள்ளதாக பழங்குடியினர் தெரிவித்தனர். இதையடுத்து, குறிப்பிட்ட சில பகுதிகளில் தொடர்ந்து இரவில் வனத்துறையினருடன் ஆய்வு மேற்கொண்டோம். அதன் பலனாக இந்த வகை காளான்களை கண்டறிந்து பதிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

ஒளிரும் காளான்களை பதிவு செய்த வன உயிரின ஒளிப்பதிவாளர் ஜூடு கூறும்போது, “இதேபோல, கேரளா, கோவாவில் ஒளிரும் காளான்களை புகைப்பட பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் இதற்கு முன்பு பலரும் இந்த வகை காளானை பார்த்திருக்கிறார்கள். ஆனால், புகைப்பட ஆதாரங்கள் இல்லை.

இதுவே முதல் புகைப்பட ஆதாரம் என கருதுகிறோம். நாங்கள் கண்டறிந்தபகுதியில் உயிர் இல்லாத மூங்கில்களில்தான் இந்த வகை காளான்கள்வளர்ந்திருந்தன. வேறு எங்கு தேடியும் இவை காணக்கிடைக்கவில்லை. பகலிலும் இந்த வகை காளான்கள்ஒளிர்ந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், வெளிச்சம் காரணமாக நம் கண்ணுக்கு தெரியாது.

இரவில், மற்ற எந்த வெளிச்சமும் இல்லாதபோது மட்டுமே நம் கண்களுக்கு புலப்படும். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி முழுவதும் இந்த வகை காளான்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறும்போது, “கன்னியாகுமரி வன உயிரின சரணாலய பகுதியில் ஒளிரும் காளான்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, இங்குள்ள பல்லுயிர்த்தன்மைக்கு சான்றாகும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in