

ஓசூர்: ஓசூர் அடுத்த சானமாவு, நொகனூர் வனப்பகுதிகளில் 50 யானைகள் முகாமிட்டுள்ளதால், 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வனத்துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி வடக்கு, காவிரி தெற்கு என இரு வனஉயிரின சரணாலயங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலம் பன்னர் கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து, 200-க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் வனப்பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம் . அதேபோல் இந்த ஆண்டு இடம் பெயரும் சீசன் தொடங்கிய நிலையில், நேற்று முன்தினம் இரவு பன்னர்கட்டா வனப்பகுதியிலிருந்து 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக தளி அடுத்த ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வழியாக ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன.
தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் சானமாவு, சினிகிரி, பள்ளிகொம்மேபள்ளி, பீர்ஜேப் பள்ளி, ராமாபுரம், ஆழியாளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்துள்ளனர். மேலும், விவசாய பணிகளுக்காக செல்வதோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதோ, வயல் வெளிகளில் காவல் இருக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். அதேபோல் யானைகளைக் கண்டால் செல்போனில் படம் எடுக்கவோ, அவற்றை துன்புறுத்தவோ கூடாது என அறிவுரை கூறினர்.
நொகனூரில் எச்சரிக்கை: தேன்கனிக்கோட்டை அடுத்த நொகனூர் வனப்பகுதியில் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து இடம் பெயர்ந்த 30-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் நொகனூர், மரக்கட்டா, உச்சனப்பள்ளி, தின்னுார், லக்கசந்திரம், மாரசந்திரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பகல் நேரத்தில் வனப் பகுதிக்கு அருகேயுள்ள விவசாய தோட்டங்களில் பாதுகாப்பாக வேலை செய்யும் படியும், மாலை மற்றும் இரவு நேரத்தில் வனப் பகுதிக்கு அருகே செல்ல வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கினர்.