

புதுச்சேரி: புதுச்சேரி உப்பனாறு வாய்க்காலில் சுற்றி வந்த முதலைக்குட்டி நேற்று அதிகாலை சிக்கியது.
புதுச்சேரி காமராஜ் சாலை அருகே உப்பனாறு வாய்க்காலில் நேற்று முன்தினம் முதலை ஒன்று காணப்பட்டது. அங்கு கூடிய மக்கள் சுமார் 4 அடி நீளமுள்ள முதலைக் குட்டியை புகைப் படம் எடுத்து வனத்துறைக்கு தெரிவித்தனர். அதற்குள் முதலை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. தகவலறிந்து காமராஜ் சாலையில் ஏராளமான மக்கள் கூடியதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட வாகன இரைச்சலால் முதலை தண்ணீருக்குள் மூழ்கி காணாமல் போனது. இதையடுத்து வனத்துறையினர் முதலையை தேடினர்.
தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு முதலையை பிடிக்க கோழிக் கறி வைத்து கூண்டு ஒன்றை தயார்படுத்தினர். மக்கள் கூட்டம் குறைந்து வாகன இரைச்சல் குறைந்த பிறகு முதலை தென்பட்ட அதே இடத்தில் கூண்டை இறக்கி வைத்தனர். நேற்று அதிகாலை 1.30 மணிக்கு முதலைக் குட்டி கோழிக் கறியை சாப்பிட வெளியே வந்த போது கூண்டுக்குள் சிக்கியது. 16 மணி நேர போராட்டத்துக்கு பிறகு முதலைக் குட்டியை மீட்டு வனத்துறைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் ஒரு முதலை?: முதலையை பார்த்தவர்கள் 4 அடி நீளம் இருந்ததாக குறிப்பிட்டனர். ஆனால் அது தண்ணீருக்கு அடியில் மறைந்துவிட்டது. கூண்டில் பிடிபட்ட முதலை இரண்டரை அடிக்கும் குறைவான அளவில் இருந்தது. இதனால் மேலும் ஒரு முதலை இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் உப்பனாற்றில் சில பகுதிகளில் வனத்துறையினர் மீண்டும் கூண்டு வைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் உப்பனாற்று கரைகளை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். உப்பனாறு வாயக்காலை சுற்றிலும் குடியிருப்புகள் இருப்பதால் கால்வாயில் யாரும் இறங்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அரசுடன் ஆலோசனை: பிடிபட்ட முதலைக்குட்டியை கூண்டோடு வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். வாய்க்கால் சகதி இருந்ததால் முதலையை சுத்தப்படுத்தி, வாயைகட்டிவிட்டு அதன் நீளம், அகலம், உடல் எடை ஆகியவற்றை சோதித்தனர். பின்னர் வனத்துறை அதிகாரி வஞ்சுளவள்ளி கூறுகையில், “உப்பனாறு கால்வாயில் அதிகாலை 2 மணியளவில் முதலையை ஊழியர்கள் பொறி வைத்து பிடித்தனர். முதலை உடல்நிலை நன்றாக உள்ளது.
இது எங்கிருந்து வந்தது என்ற விசாரணை தொடங்கியுள்ளது. சட்டவிரோதமாக வன விலங்குகளை வளர்த்திருந்தால் அது தண்டனைக்குரிய குற்றம். இந்த முதலைகுட்டி ஒரு வயதுக்குள்தான் இருக்கும். முதலை 1.35 கிலோ எடையுடன் 2.3 அடி நீளம் கொண்டிருந்தது. இந்த முதலையை 3 மாதம் முன்பு கூட விட்டிருக்கலாம். பாலத்தின் அடியில் பாதுகாப்பாக வாழ பழகியிருக்கலாம். இது எப்போது விடப்பட்டது என்பதை கணிக்க முடியவில்லை. இருப்பினும் வனத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இது தவிர வேறு முதலை உள்ளதா என ஆங்காங்கே பொறி வைத்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். இந்த முதலை இடம் பெயர்ந்து வந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இது எங்கிருந்து வந்தது என்பதுதான் கேள்வி. கனமழை பெய்தபோது வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதா எனவும் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புக்கு தேவையானநடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. முதலையை வளர்ப்பதா? அல்லது மிருகக் காட்சி சாலையில் விடுவதா? பாதுகாப்பான வாழ்விடத்தில் விடுவதா? என்பது குறித்து அரசுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.