இரை தேட பயிற்றுவிக்கும் இருவாச்சி: பார்க்க தயாராகும் பறவை ஆர்வலர்கள்

இரை தேட பயிற்றுவிக்கும் இருவாச்சி: பார்க்க தயாராகும் பறவை ஆர்வலர்கள்
Updated on
2 min read

வால்பாறை: மேற்குத்தொடர்ச்சி மலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் இருவாச்சி பறவைகள் அதிக அளவில் உள்ளன. இருவாச்சி பறவைகளின் இனப்பெருக்க காலம் முடிந்து, தன் குஞ்சுகளுக்கு பறப்பதற்கும், இரை தேடவும் கற்றுக்கொடுக்கும் காலம் தொடங்கி உள்ளதால் அவற்றை காண கோவை மாவட்டம் வால்பாறைக்கு பறவை ஆர்வலர்கள் வர தொடங்கியுள்ளனர். இது குறித்து பறவை ஆர்வலர்கள் கூறியதாவது: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறையை அடுத்த வரட்டுப்பாறை, பழைய வால்பாறை, புது தோட்டம் அக்கா மலை புல்வெளி, அணவி உள்ளிட்ட எஸ்டேட் பகுதியில் உள்ள மரங்களில் இருவாச்சி பறவைகள் தற்போது அதிக அளவில் காணப்படுகின்றன.

ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இருவாச்சி பறவைகள் தன் குஞ்சுகளுக்கு பறப்பதற்கும், இரை தேடவும் கற்றுக்கொடுக்கும் காட்சிகளை காண முடியும் என்பதால் இந்த கால கட்டத்தில் பறவை ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதிக்கு அதிக அளவில் வருகின்றனர். உலகம் முழுவதும் 54 வகை இருவாச்சி பறவைகள் இருக்கின்றன. இந்தியாவில் 9 வகை இருவாச்சிகள் உள்ளன. அதில் தென்னிந்தியாவில் 4 வகை இருவாச்சிகள் காணப்படுகின்றன. கேரள மாநிலத்தின் மாநில பறவையாக இருவாச்சி உள்ளது. தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெரும் பாத இருவாச்சி, மலபார் இருவாச்சி, சாம்பல் நிற இருவாச்சி, மலபார் பாத இருவாச்சி ஆகிய நான்கு வகைகள் உள்ளன. இலக்கியங்களில் இவை ‘மலை முழுங்கான்’ என குறிப்பிடப்பட்டுள்ளன. மலைவாழ் மக்கள் ‘தாண்டி பறவை’ என அழைக்கின்றனர்.

வால்பாறை பகுதியில் காணப்பட்ட<br />இருவாச்சி பறவைகள்.
வால்பாறை பகுதியில் காணப்பட்ட
இருவாச்சி பறவைகள்.

இருவாச்சி பறவையின் இனப்பெருக்க காலம் பிப்ரவரி முதல் மே மாதம் வரையாகும். இரை தேடுவதில் ஆரம்பித்து இளைப்பாறுவது வரை எங்கு சென்றாலும் ஆண் பறவையும் பெண் பறவையும் இணைந்தே செல்கின்றன. இருவாச்சி பறவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரே இணையோடு வாழக்கூடியவை. இனப்பெருக்க காலத்தில் இரண்டு பறவைகளும் சேர்ந்து மிகவும் உயரமான மரங்களில் கூட்டைத் தேர்வு செய்யும். கூடு என்பது மரங்களில் உள்ள இயற்கையான பொந்துகள்தான். பெண் பறவை பொந்துக்குள் சென்று அமர்ந்தவுடன் ஆண் பறவை தனது எச்சில் மற்றும் ஆற்று படுகைகளில் இருந்து சேகரிக்கும் ஈரமான மண்ணைக் கொண்டு கூட்டை மூடிவிடும்.

பெண் பறவைக்கு உணவு கொடுக்க ஒரு சிறிய துவாரத்தை மட்டும் விட்டுவிடும். பெண் பறவை தனது இறக்கை முழுவதையும் உதிர்த்து ஒரு மெத்தை போன்ற தளத்தை அமைத்து அதன் மேல் ஒன்று முதல் 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். சுமார் 7 வாரம் கழித்து முட்டைகள் பொரிந்துவிடும். குஞ்சுகள் பிறந்தவுடன் பெண் பறவை கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வரும். அதுநாள் வரை ஆண் பறவை சிறிய துவாரம் வழியே பெண் பறவைக்குப் பழக்கொட்டைகள், பூச்சிகளை உணவாக கொண்டுவந்து ஊட்டும். பெண் பறவை இரை தேடச் சென்றவுடன், குஞ்சுகளை பராமரிக்கும் முழு பொறுப்பையும் ஆண் பறவைதான் மேற்கொள்ளும். குஞ்சுகளுக்கு பறக்கவும், இரை தேடவும் கற்றுக்கொடுப்பதும் ஆண் பறவையின் பணியாகும். பெரிய அலகை உடைய இந்த பறவை 30 முதல் 40 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. இவ்வாறு அவர்கள் கூறினர்.வால்பாறை பகுதியில் காணப்பட்ட இருவாச்சி பறவைகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in