

உதகை: நீலகிரி மாவட்டத்தில் புலிகள் உயிரிழப்பு குறித்து சமூக வலை தளத்தில் கருத்து பதிவிட்டதற்கு வனத்துறை அனுப்பிய சம்மனுக்கு, விசாரணைக்காக வனத்துறை அலுவலகத்தில் பெங்களூரு பத்திரிகையாளர் நேற்று ஆஜரானார்.
புலிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் முதல் விஷம் வைத்து கொல்லப்பட்டது வரை கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், நீலகிரி மாவட்டத்தில் அடுத்தடுத்து 10 புலிகள் உயிரிழந்தன. இதில் நீலகிரி வனக்கோட்டத்தில் மட்டும் 7 புலிகள் இறந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறுகிய நாட்களில் இத்தனை புலிகள் உயிரிழந்த விவகாரம், தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
பலர் சமூக வலைதளங்களில் புலிகள் வேட்டையாடப்பட்டதாக கருத்துகளை தெரிவித்தனர். புலிகளின் இறப்புக்கான காரணங்களை அறிய, தேசிய புலிகள் ஆணைய குற்ற பிரிவு ஐஜி முரளிகுமார், மத்திய வன விலங்கு குற்ற தடுப்பு பிரிவு தென் மண்டல இயக்குநர் கிருபா சங்கர், மத்திய வன விலங்கு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி ரமேஷ் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் கொண்ட தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையக் குழுவினர் கடந்த செப்டம்பர் மாதம் விசாரணை மேற்கொண்டனர்.
இக்குழுவினர் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர், வெளிமண்டல துணை கள இயக்குநர்கள், நீலகிரி வன கோட்ட வன அலுவலர் ஆகியோரிடம் விசாரித்தனர். புலிகள் இறந்த பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு, இயற்கை காரணங்களால் அவை உயிரிழந்ததாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில், புலிகள் வேட்டையாடப்பட்டதாக கருத்துகளை தெரிவித்தவர்களுக்கு சம்மன் அனுப்பி, நீலகிரி மாவட்ட வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், பெங்களூருவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜோசப் ஹூவருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு ஆஜராக பட்சத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்திருந்தனர். இதையடுத்து, முது மலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண்குமார் முன்பு ஜோசப் ஹூவர் நேற்று விசாரணைக்கு ஆஜராகினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கர்நாடகா மாநில வன விலங்கு வாரியத்தில் உறுப்பினராக இருந்துள்ளேன். வன உயிரின பத்திரிகையாளர்கள் சங்க தலைவராகவும் உள்ளேன். நீலகிரி மாவட்டத்தில் புலிகள் இறப்பு விவகாரம் தொடர்பாக, எனது கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டேன். வனத்துறையினர் 10 புலிகள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இறந்த புலிக்குட்டிகளின் தாய் குறித்து, இதுவரை வனத்துறையினர் விவரம் தெரிவிக்கவில்லை. இந்த புலி வேட்டையாடப்பட்டிருக்கும்.
இந்த கருத்துக்கு எதிராக விசாரணைக்கு ஆஜராக இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகம் மட்டுமின்றி, நீலகிரி வடக்கு, தெற்கு, சீகூர், நடுவட்டம் வனச்சரகங்கள் என 5 சம்மன்கள் அனுப்பப்பட்டன. மேலும், விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மிரட்டல் விடுக்கும் வகையில் சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணையில், புலிகள் வேட்டையாடப்பட்டதாக தெரிவித்த நபரின் விவரங்களை கேட்டனர்.
பத்திரிகையாளர் என்ற முறையில் எனது சோர்ஸ்கள் குறித்து கூற முடியாது என தெரிவித்தேன். மேலும், வீடியோ கான்ஃபரன்ஸ் உட்பட பிற வகைகளில் விசாரணை நடத்த முடியும் என்ற நிலையில், என்னை அலைக்கழிப்பதற்காகவே வனத்துறையினர் நேரில் ஆஜராக வலியுறுத்தினர். வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடர உள்ளேன்” என்றார். இதுகுறித்து விசாரணை அதிகாரி அருண்குமாரிடம் கேட்ட போது, கருத்து கூற மறுத்து விட்டார்.