Published : 17 Nov 2023 04:02 AM
Last Updated : 17 Nov 2023 04:02 AM

குடியிருப்புகளுக்கு அருகே கரடிகள் நடமாட்டம்: அந்தியூர் வனக்கிராம மக்கள் அச்சம்

அந்தியூரை அடுத்த பர்கூர் வனப்பகுதியில் உள்ள கொங்காடை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

ஈரோடு: அந்தியூர் அருகே உள்ள வனக்கிராமத்தில் கரடிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன. வனப் பகுதியை ஒட்டியுள்ள கொங்காடை உள்ளிட்ட கிராமங்களில், இரவு நேரத்தில் கரடிகள் நடமாடுவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொங்காடை கிராமத்தில் உள்ள வீட்டில் நுழைந்த கரடி, உணவுப் பொருட்களை சாப்பிட்டது.

கிராம மக்கள் ஒன்று திரண்டு கரடியை வனப் பகுதிக்கு விரட்டினர். இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் கரடிகள் நடமாடுவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இவற்றை தடுக்கவும், கண்காணிக்கவும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அந்தியூர் வனப்பகுதியில் கரடிகளால் பாதிப்பு ஏற்பட்டதாக புகார் எதுவும் வரவில்லை. பொதுவாக கரடிகள் அபாயகரமான விலங்குகளாக கருதப்பட்டாலும், மனிதர்களை அச்சுறுத்தும் வகையில் அவற்றின் செயல்பாடு இருக்காது. மனிதர்கள் ஒன்று திரண்டு விரட்டினால், அவை ஓடி விடும். வனப்பகுதியில் நல்ல மழைப்பொழிவு இருப்பதால், பசுமையாக தற்போது காட்சியளிக்கிறது.

கரடிகளின் உணவுகளான பழங்கள், காய்கறிகள் போன்றவை போதுமான அளவு அவற்றுக்கு கிடைப்பதில் பிரச்சினை இல்லை. இந்நிலையில், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயரும் போது வழித்தடம் மாறி, கிராமப்பகுதிக்குள் கரடிகள் நுழைந்து இருக்கலாம். இருப்பினும், அவற்றை கண்காணிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x