Published : 14 Nov 2023 04:45 PM
Last Updated : 14 Nov 2023 04:45 PM

சுடுகாட்டு பாதையில் குப்பை கொட்டும் அகரம்தென் ஊராட்சி

தாம்பரம்: தாம்பரம் அருகே அகரம்தென் ஊராட்சியில் உள்ள அனைத்து மத சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில், ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டுவதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் அருகே அமைந்திருக்கிறது அகரம்தென் ஊராட்சி. இந்த ஊராட்சியில் அகரம்தென், கஸ்பாபுரம், வெங்கம்பாக்கம், சத்யா நகர் என முக்கிய பகுதிகள் உள்ளன. இதில் கஸ்பாபுரம் பகுதி சுடுகாடு, வெங்கம்பாக்கம் சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த சுடுகாடு அனைத்து மதத்தினருக்கும் தனித்தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களுடன் ஒருங்கிணைந்த வகையில் மயான பகுதியாக பயன்பாட்டில் உள்ளது.

இந்த சுடுகாட்டில் ஊராட்சியால் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் மயானங்களுக்கு செல்லும் சாலையில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதாக அவ்வழியாக செல்லும் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அத்துடன் குப்பைகளுக்கு ௮டிக்கடி தீ வைத்து விடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக எந்த பாதுகாப்பும் இன்றி மருத்துவக் கழிவுகளும் இங்கு தூக்கி வீசப்பட்டு வருவதுடன், மனித கழிவுகளும் இங்கு கொட்டப்படுகின்றன. 3 மத சுடுகாட்டு பாதையை அடைத்தபடி குப்பை கொட்டப்படுவதால் மயான பகுதிக்கு உள்ளே செல்ல முடியவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்க செல்வோர் கடும் அவதியடைகின்றனர்.

மேலும், இந்த சுடுகாட்டுக்கு சாலை வசதி, மின்விளக்கு வசதிகள் இல்லை. தொடர்ந்து குப்பை கழிவுகளை எரித்து வருவதால் புகை மூட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, சுவாச கோளாறு சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படுகிறது. மேலும் நாய், மாடு, பன்றி போன்ற கால்நடைகள் குப்பை கழிவுகளை தோண்டுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதை நிறுத்துவதோடு, இருக்கும் குப்பைகளை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும் என ௮ப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக ஆர்வலர் முஹம்மது சலீம் கூறியது: அகரம்தென் ஊராட்சி கஸ்பாபுரத்தில் அமைந்துள்ள சுடுகாட்டு பாதையில் குப்பைகளை தொடர்ந்து கொட்டுவதால் அப்பகுதி குப்பை கிடங்குபோல் காட்சி அளிக்கிறது. கிராமங்களை சுத்தமாக வைக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே இதுபோன்று குப்பைகளை கொட்டுவது வேதனைக்குரியது. பாதையில் குப்பை கொட்டப்பட்டுள்ளதால் இறுதி மரியாதை செலுத்த சுடுகாட்டுக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள், ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு பல முறை புகார் அளித்துள்ளனர். ஆனாலும் குப்பை அகற்றப்படாததுடன், ஊராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பையை மீண்டும் சுடுகாடு பகுதியில் கொட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் அலட்சியத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, குப்பையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிஅப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் குப்பை கொட்ட கூடாதுஎன ஊராட்சி நிர்வாகம் சார்பில்அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஆனால், அகரம்தென் ஊராட்சி நிர்வாகமே தொடர்ந்து அப்பகுதியில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முஹம்மது சலீம்

இதுகுறித்து விசாரித்தபோது வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியது: அகரம்தென் ஊராட்சியில் சேகரமாகும் குப்பைகள் அனைத்தும் கொளத்தூர் பகுதிக்கு லாரி மூலம் கொண்டு செல்லப்படுகிறது. கிராமங்களில் சேகரிக்கும் குப்பைகளை சுடுகாட்டின் அருகே கொட்டி அவற்றை ௮ங்கிருந்து அப்புறப்படுத்தி வருகிறோம். ஏற்கெனவே பொதுமக்கள் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர். சுடுகாட்டுக்கு பாதிப்பில்லாத வகையில் குப்பைகளை கொட்ட ஊராட்சிக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுடுகாட்டு பாதைக்கு பாதிப்பு இல்லாத வகையில் குப்பைகள் அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x