

சென்னை: சென்னையில் தீபாவளியன்று காற்றின் மாசு கடந்தாண்டைவிட இந்தாண்டு 40 சதவீதம் குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அபாய அளவை ஒட்டியே காற்றின் மாசு மோசமாகவே இருந்தது.
இதுகுறித்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள், மாசு கட்டுப்பாடு குழுமங்கள் முக்கியமான நகரங்களில் குறுகிய கால கண்காணிப்பாக, தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பும், 7 நாட்களுக்குப்பின்பும் முக்கிய காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்காணிக்க மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில், தமிழக அரசு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணிவரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவித்தது. மேலும், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுப்புற காற்றின் மாசு தர அளவையும் மற்றும் ஒலி மாசு அளவையும் கண்டறிய சென்னையில் பெசன்ட் நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை, வளசரவாக்கம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 7 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஒலி மாசுபாட்டின் அளவு தீபாவளிக்கு முன் நவ.6-ம் தேதி மாலை 6 முதல் இரவு 12 மணி வரையும், தீபாவளியன்று மாலை 6 முதல் இரவு 12 மணி வரையும் ஆய்வு செய்யப்பட்டது. ஒலிமாசு பொறுத்தவரை, நவ.6-ம் தேதி குறைந்த அளவாக திருவொற்றியூரில் 52.3 டெசிபலும், அதிகளவாக நுங்கம்பாக்கத்தில் 64.7 டெசிபலும் இருந்தது. தீபாவளி அன்று தி.நகரில் குறைந்த அளவு ஒலி மாசு 60.5 டெசிபல், அதிகளவாக வளசரவாக்கத்தில் 83.6 டெசிபல் கண்டறியப்பட்டது. தேசிய சுற்றுப்புற ஒலிமாசுபாட்டின் அளவான பகல் 65 டெசிபல், இரவு 55 டெசிபலை விட தீபாவளியன்று சென்னையில் கண்டறியப்பட்ட ஒலிமாசு அளவுகள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
காற்று மாசு: காற்றுத்தர குறியீடு, தீபாவளி நாளான நவ.12 காலை 6 முதல் மறுநாள் நேற்று காலை 6 மணிவரை, நடைபெற்ற ஆய்வில், மிக மோசமான அளவாக 207 லிருந்து 365 வரை இருந்தது. குறைந்த அளவாக பெசன்ட் நகரில் 207, அதிகளவாக வளசரவாக்கத்தில் 365 ஆக இருந்தது. பொதுமக்கள் பெருமளவில் பட்டாசுகள், வாண வேடிக்கைகள் வெடித்தது, காற்றில் காணப்பட்ட அதிக ஈரத்தன்மை, காற்றின் மிகக் குறைந்த வேகம் ஆகியவை இதற்கு முக்கியமான காரணமாகும். இந்த வானிலை காரணிகளால், பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் புகை வான்வெளியில் விரவுவதற்கு ஏதுவான சூழ்நிலை அமையவில்லை.
தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், காவல்துறை, பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஊடகங்கள் மூலமாக பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்தாண்டு தீபாவளியை விட, இந்தாண்டு தீபாவளியில் காற்றின் தர மாசு அளவு 40 சதவீதம் குறைந்துள்ளது தெரியவருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மோசமான அளவு: தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதற்கான நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் அவற்றை யாரும் பின்பற்றியதாக தெரியவில்லை. காலை, பகல், மாலை என அனைத்து நேரமும் பட்டாசு சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. குறிப்பாக நேற்று மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை பட்டாசு அதிகளவில் வெடிக்கப்பட்டது. ஏற்கெனவே காற்றில் ஈரப்பதம் அதிகளவில் இருந்ததால், பனிமூட்டம்போல் புகை மூட்டம் காணப்பட்டது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இதே நிலை காணப்பட்டது. பட்டாசு காரணமாக சென்னையில் காற்றின் தரக்குறியீடு அதிகளவாகவே இருந்துள்ளது. கடந்தாண்டை விட 40 சதவீதம் குறைவு என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தாலும், அபாய அளவை ஒட்டி மோசமாகவே தரம் இருந்தது.
நிர்ணயிக்கப்பட்ட அளவின்படி காற்றின் தரக்குறியீடு 201- 300 வரை மோசம், 301-400 மிக மோசம், 400-க்கு மேல் அபாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், பெசன்ட் நகர் -207, தி.நகர் -306, நுங்கம்பாக்கம் -364, திருவல்லிக்கேணி -253, சவுகார்பேட்டை -336, வளசரவாக்கம் -365, திருவொற்றியூர் -227 என காற்றின் தரக்குறியீடு தீபாவளிக்குப்பின் பதிவாகியுள்ளது. இவை அனைத்துமே மோசம் மற்றும் மிக மோசமான அளவை குறிப்பதாகும். சென்னை தவிர பிற மாவட்டங்களில் சில இடங்களிலும் காற்றின் தரக்குறியீடு மோசமான அளவிலேயே பதிவாகியுள்ளது. இதன் மூலம் சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.