காலநிலை மாற்றத்தால் முட்டைகோஸ், காலிஃபிளவரில் நோய் தாக்கம்: ஓசூர் விவசாயிகள் வேதனை

ஓசூர் அருகே மெட்டரை கிராமத்தில் நோய் தாக்கம் காரணமாக அறுவடை செய்யாமல் வயலில் விடப்பட்டுள்ள முட்டைகோஸ்.
ஓசூர் அருகே மெட்டரை கிராமத்தில் நோய் தாக்கம் காரணமாக அறுவடை செய்யாமல் வயலில் விடப்பட்டுள்ள முட்டைகோஸ்.
Updated on
1 min read

ஓசூர்: ஓசூர் பகுதியில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், முட்டைகோஸ் மற்றும் காலிஃபிளவரில் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஓசூர், உத்தனப்பள்ளி, அளேசீபம், ஆவலப்பள்ளி, கெலமங்கலம், மெட்டரை உள்ளிட்ட பகுதிகளில் குறுகிய காலத்தில் விளையும் கீரை, முட்டைகோஸ், காலிஃபிளவர், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் காய்கறிகள் பத்தலப்பள்ளி காய்கறி சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்குச் செல்கின்றன.

சந்தையில் அதிக விலை கிடைக்கும் காய்கறியின் விலையை மையமாக வைத்து சாகுபடி பரப்பின் அளவும் ஏற்ற, இறக்கத்தில் இருக்கும். இதனால், கூடுதல் விலை கிடைக்கும் காய்கறிகள் ஒரே நேரத்தில் விவசாயிகள் சாகுபடி செய்வது அதிகரித்து வருகிறது. இதனால், சந்தைக்கு ஒரே ரக காய்கறிகள் வரத்து அதிகரித்து விலை குறைவதும், நோய் பாதிப்பால் விலை குறைந்து விவசாயிகள் வருவாய் இழப்பைச் சந்திக்கும் நிலை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. தற்போது, வெயில், மழை மற்றும் குளிர் என சீதோஷ்ண நிலையும் அடுத்தடுத்து ஏற்பட்ட மாற்றத்தால், முட்டைகோஸ் மற்றும் காலிஃபிளவரில் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நோய் தாக்கத்தால், முட்டைகோஸ் அழுகி வீணாகிறது. காலிஃபிளவரில் கரும்புள்ளி நோய் பாதிக்கப்பட்டுள்ளது.

கெலமங்கலத்தில் கரும்புள்ளி நோய் தாக்கம் காரணமாக அறுவடை<br />செய்யப்பட்ட காலிஃபிளவரைக் குப்பையில் கொட்டும் பெண்.
கெலமங்கலத்தில் கரும்புள்ளி நோய் தாக்கம் காரணமாக அறுவடை
செய்யப்பட்ட காலிஃபிளவரைக் குப்பையில் கொட்டும் பெண்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: சந்தையில் முட்டைகோஸ் மற்றும் காலிஃபிளவருக்கு நல்ல விலை கிடைக்கும் நிலையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், முட்டை கோஸ் அறுவடை செய்யும் முன்னரே தோட்டங்களில் அழுகி விடுகிறது. காலிஃபிளவரிலும் கரும்புள்ளி நோய் தாக்கம் ஏற்பட்டு, அறுவடை செய்ய முடியாத நிலை நிலவுகிறது. எனவே, வேளாண் துறையினர் ஆய்வு செய்து நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வரும் நாட்களில் காய்கறி சந்தை வாய்ப்புகள், விலை விவரங்களை முன் கூட்டியே அறிவிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். வேளாண் துறையினர் ஆய்வு செய்து நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in