

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே குட்டியுடன் சிறுத்தை நடமாடும் கிராமங்களில் வனத்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பாலக்கோடு அடுத்த பி.செட்டிஅள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள காப்புக் காடு பகுதியில் சிறுத்தை ஒன்று தன் குட்டியுடன் நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, பாலக்கோடு வனச் சரகர் நடராஜ் தலைமையிலான வனத் துறையினர் அப் பகுதிக்கு சென்று கள தணிக்கை செய்தனர்.
அதில், சிறுத்தை அப்பகுதியில் நடமாடுவது காலடி தடங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. எனவே, அப்பகுதியில் உள்ள கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக வனத்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு நேரங்களில் வெளியில் தனியாக நடமாட வேண்டாம் என்றும், தவிர்க்க முடியாத சூழலில் குச்சி மற்றும் மின் விளக்குடன் செல்ல வேண்டும் என்றும், வனப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும், கால் நடைகளை திறந்த வெளியில் கட்டி வைக்க வேண்டாம் என்றும் வனத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.