வால்பாறையில் சிறுத்தை தாக்கி சிறுவன் படுகாயம்: கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

வால்பாறையில் சிறுத்தை தாக்கி சிறுவன் படுகாயம்: கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
Updated on
1 min read

வால்பாறை: வால்பாறையில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை அடுத்துள்ளது சிறுகுன்றா எல்.டி. டிவிஷன். இங்கு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றுகிறார். இவரது மகன் பிரதீப் (7), நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த புதரில் பதுங்கி இருந்த சிறுத்தை, சிறுவனை தாக்கியது.

சிறுவனின் சத்தம் கேட்டு தொழிலாளர்கள் ஓடி வந்த போது சிறுவனை விட்டு விட்டு சிறுத்தை புதருக்குள் சென்று மறைந்தது. இந்த சம்பவத்தில் சிறுவனின் தலை, கை ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் பிரதீப்பை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை பெற்று வரும் சிறுவனை வனத்துறையினர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில் வனத்துறையினர் சிறுவனை சிறுத்தை தாக்கிய குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கூறும்போது, ‘‘குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்லவும், குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்லவும் பயமாக உள்ளது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: எஸ்டேட் பகுதியில் குடியிருப்புகளை சுற்றி உள்ள புதர்களை அகற்ற எஸ்டேட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in