உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் சோலார் மின்வேலி அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படுமா?

உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் சோலார் மின்வேலி அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படுமா?
Updated on
1 min read

உடுமலை: வேளாண் நிலங்களுக்குள் வன விலங்குகள் ஊடுருவலை தடுக்க வேளாண் பொறியியல் துறை சார்பில் 70 கி.மீ., தொலைவுக்கு சோலார் மின் வேலி அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி ஓராண்டாகியும் நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம், உடுமலை, அமராவதி, கொழுமம் வனச்சரகங்கள் உள்ளன. இதன் மொத்த பரப்பு 38,000 ஹெக்டேர் ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய விவசாய நிலங்களில் வன விலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது. குறிப்பாக காட்டுப்பன்றிகள், குரங்குகள், மயில்களின் தொல்லை அதிகளவில் இருந்து வருகிறது.

வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் வன விலங்குகள் விரும்பி உண்ணும் பயிர்களை தேர்வு செய்து நடவு செய்வதால், இயற்கையாகவே காட்டுப்பன்றிகள் ஊடுருவல் தொடர்கிறது. இதனால் பாதிக்கப்படுவோருக்கு வனத்துறை சார்பில் அதிகபட்ச இழப்பீடும் வழங்கப்படுகிறது. இதேபோல காட்டு யானைகளால் பாதிப்புகள் ஏற்படுவதும் உண்டு. எனவே காட்டுப் பன்றிகள் ஊடுருவல் தான் வன எல்லையில் வசிக்கும் விவசாயிகளின் தலையாய பிரச்சினையாக உள்ளது.

இதற்கு சோலார் மின் வேலி அமைப்பதன் மூலம் தீர்வு கிடைக்கும் என ஓராண்டுக்கு முன்பு வனத்துறை ஆலோசனை அளித்தது. இதற்கான நிதி ஆதாரங்கள் இல்லாததால், வேளாண் பொறியியல் துறை மூலம் நேரடியாக அந்தந்த விவசாயிகளின் நிலத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மின் வேலி அமைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இத்திட்டம் இதுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. தொடர்ச்சியாக விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருவதும் தொடர் நிகழ்வாக உள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: வேளாண் நிலங்களுக்குள் வன விலங்குகள் ஊடுருவலை தடுக்க சோலார் மின் வேலி அமைக்கலாம் என்ற யோசனையை தான் வனத்துறை முன் வைத்துள்ளது. இதற்கான நிதி ஆதாரம் இதர பணிகள் எதையும் வனத்துறை திட்டமிடவில்லை. தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை மூலமாகவே அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு மானிய உதவியில் மின்வேலி அமைக்க அத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் வேளாண் பொறியியல் துறை சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும், நிதி ஒதுக்கீடுகளும் அளிக்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

வேளாண் பொறியியல் துறையினர் கூறும்போது, ‘‘இது குறித்து துறை ரீதியாக அரசின் கவனத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. போதிய நிதி ஒதுக்கீடுகள் வரவில்லை. அதனால் இத்திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in