ஆழியாறை மாசுபடுத்தும் கழிவுகள்: நீர்வளத் துறை நடவடிக்கை எடுக்குமா?

பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் பகுதி ஆழியாறு ஆற்றில் வீசி செல்லப்பட்டுள்ள துணிகள், கழிவுகள்.
பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் பகுதி ஆழியாறு ஆற்றில் வீசி செல்லப்பட்டுள்ள துணிகள், கழிவுகள்.
Updated on
1 min read

பொள்ளாச்சி: மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொள்ளாச்சி அருகே ஆழியாறு ஆற்றின் குறுக்கே ஆழியாறு அணை கட்டப்பட்டுள்ளது. ஆழியாறில் தொடங்கி மணக்கடவு வரை 42 கி.மீ. நீளமுடையது இந்த ஆறு. குடிநீருக்கும், பாசனத்துக்கும் ஆதாரமாக உள்ள இந்த ஆற்றில் பல்வேறு இடங்களில் கழிவுகள் கொட்டப்படுகின்றன. குறிப்பாக, அம்பராம்பாளையத்தில் திதி கொடுப்பவர்கள், குளிக்க வரும் நபர்கள் துணிகளைஆற்றில் வீசி செல்கின்றனர். மேலும், ஆற்றின் கரையோரத்தில் கழிவுகளை கொட்டுவதால் தண்ணீர் மாசுபடுகிறது. இதனை தடுக்க நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஆழியாறு அணையில் இருந்து ஆற்றில் பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த ஆறு ஆழியாறில் இருந்து மணக்கடவு வரை தமிழகத்திலும், கேரளாவில் சித்தூர் தாலுகாவிலும் பயணித்து பாரதபுழா ஆற்றில் கலக்கிறது. ஆழியாற்றின் மூலமாக லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதற்காக ஆற்றில் பல்வேறு இடங்களில் குடிநீர் திட்ட கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி, அம்பராம்பாளையம் - குளத்தூர் செல்லும் சாலையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, ஈமக்கிரியை செய்வதற்கு ஏராளமான மக்கள் வருகின்றனர்.

மொட்டை அடிப்பதுடன் முடி, பிளேடு, பயன்படுத்திய ஆடைகளை ஆற்றில் வீசுகின்றனர். இதனால், ஆற்றில் தண்ணீர் எடுக்க போடப்பட்டு உள்ள குழாய்களை துணிகள் அடைத்துக் கொள்கின்றன. அருகிலுள்ள குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. தோஷங்களை கழிக்க பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசுகின்றனர். அவ்வாறு துணிகளை விட்டுச்செல்வதால், ஆறு மாசுபட்டு வருவது குறித்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் சுட்டிக்காட்டி வருகின்றன.

மேலும், இருசக்கர வாகனத்தில் வந்து ஆற்றின் இடையே உள்ள பாறையில் அமர்ந்து சிலர் மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை உடைத்து ஆற்றில் வீசி செல்கின்றனர். பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களையும் வீசி செல்கின்றனர். நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டுமென நீதிமன்றமும், அரசும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், ஆற்றில் துணிகளையும் உடைந்த பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்களை வீசி ஆற்றை மாசுப்படுத்தி செல்கின்றனர். இதனை தடுக்க நீர்வளத் துறையும், ஊராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in