

கோத்தகிரி: கோத்தகிரி மலைபாதையில் காரை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலை பாதையில், கடந்த 10 நாட்களாக ஒற்றை காட்டு யானை சுற்றித்திரிகிறது. இந்நிலையில், மேல்தட்டப்பள்ளம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை போக்குவரத்து நெரிசலால், மேட்டுப்பாளையம் செல்ல முடியாமல் வாகனங்கள் அப்பகுதியில் அணி வகுத்து நின்றன. அப்போது, ஒற்றை காட்டு யானை திடீரென வந்து, சாலையில் நின்றிருந்த காரை சேதப்படுத்தியது.
இதனை முன்னால் இருந்த வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்தனர். காரில் பயணித்தவர்கள் தப்பி ஓடியதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சமீப காலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர் கதையாக உள்ளது. சம்பவம் நடந்த மேல்தட்டப் பள்ளம் பகுதியில் காட்டு யானை ஏற்கெனவே பேருந்து கண்ணாடியை உடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வனத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்த வேண்டும். கோத்தகிரி வனத்துறையினர் நாள் தோறும் ரோந்து பணியை தொடர வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.