வடகிழக்கு பருவமழை தொடங்காத நிலையில் உதகையில் முன்கூட்டியே நீர் பனிப்பொழிவு

உதகை தாவரவியல் பூங்காவில் நீர் பனிப்பொழிவு தாக்கத்தால் கருகிய மலர்கள். படம்: ஆர்.டி.சிவசங்கர்
உதகை தாவரவியல் பூங்காவில் நீர் பனிப்பொழிவு தாக்கத்தால் கருகிய மலர்கள். படம்: ஆர்.டி.சிவசங்கர்
Updated on
1 min read

உதகை: வட கிழக்கு பருவ மழை இன்னும் தொடங்காத நிலையில், உதகையில் முன்கூட்டியே நீர் பனிப் பொழிவு ஆரம்பித்துள்ளதால் தேயிலை, மலை காய் கறிகளை நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை பனிக் காலம் நிலவும். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சீதோஷ்ண கால நிலை மாறுபாடு காரணமாக தென் மேற்கு பருவ மழை தாமதமாக தொடங்கியது. இதற்கிடையே இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு தென் மேற்கு பருவ மழையும் பெய்யவில்லை.

கடந்த மூன்று மாதங்களாக அவ்வப்போது லேசான மழை பெய்தாலும் கன மழை பெய்யவில்லை. இதனால், நீர் நிலைகளில் தண்ணீர் அளவு குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், முன் கூட்டியே தற்போது நீர் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. அதேசமயம், இந்த மாதம் தொடங்க வேண்டிய வட கிழக்கு பருவமழையும் இதுவரை பெய்யவில்லை.

உதகையில் வழக்கமாக நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் உறைபனி தாக்கமும், கடைசியில் பனிப் பொழிவும் அதிகரித்து காணப்படும். ஆனால், வடகிழக்கு பருவமழையே இன்னும் தொடங்காத நிலையில் தற்போது நீர் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில், உதகை நகரில் பெரும்பாலான இடங்களில் நேற்று நீர் பனிப்பொழிவு காணப்பட்டது.

நீர் நிலைகள் அருகே புல் மைதானங்கள், தாவரவியல் பூங்கா, மார்க்கெட் பகுதி, குதிரை பந்தய மைதானம் ஆகிய இடங்களில் நீர் பனிப் பொழிவு அதிகமாக இருந்தது. அதேபோல, சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது நீர் பனி காணப்பட்டது. தாவரவியல் பூங்காவிலுள்ள புல்வெளிகளில் வழக்கத்தைவிட அதிகளவில் நீர்த்துளிகள் படர்ந்திருந்தன.

இரவு, அதிகாலை வேளையில் நீர் பனிப்பொழிவும், பகல் நேரங்களில் கடும் வெயிலும் அதிகரித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் உதகையில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உதகையில் கடும் நீர் பனிப் பொழிவு கொட்டுவதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்ய வேண்டிய நேரத்தில் நீர் பனி விழுவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இதனால் தேயிலை மற்றும் மலை காய்கறிகளை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடும் குளிர் நிலவுவதால், அதிகாலை நேரங்களில் தேயிலை மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகினர். நீர் பனிப் பொழிவால் உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தாவரங்கள் கருக தொடங்கியுள்ளன.

உதகை தாவரவியல் பூங்காவில் கண்காட்சிக்காக காட்சிப் படுத்தப்பட்டிருந்த மலர்கள் கருகிவிட்டன. இதனால், அந்த மலர்களை பூங்கா ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். மேலும், பனியால் மலர்ச் செடிகள் பாதிக்கப்படாமல் இருக்க பிளாஸ்டிக் போர்வை கொண்டு பாதுகாப்பு அரண் அமைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in