

உடுமலை: உடுமலை அருகே அமராவதி வனப்பகுதியில் புலியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கீழ் உடுமலை, அமராவதி, கொழுமம் உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன. அங்கு புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, யானை உள்ளிட்ட பல அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. இதனால், மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இந்த நிலையில், மர்மமான முறையில் நேற்று முன்தினம் புலி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு நேற்று சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.
இது குறித்து அமராவதி வன அலுவலர் சுரேஷ் குமார் கூறும்போது, "அமராவதி வனச்சரகத்துக்கு உட்பட்ட கல்லாபுரம் சரகத்தில் கழுதகட்டி ஓடை உள்ளது. அந்த வழியாக வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆண் புலி இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அங்கு ஆய்வு செய்யப்பட்டது. மேலும், தேசிய புலிகள் காப்பக ஆணைய வழிகாட்டுதல் அடிப்படையில், கால்நடை மருத்துவர்கள் குழு மூலமாக பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மூன்று பேர் கொண்ட கால்நடை மருத்துவர்கள் குழு மேற்கொண்ட பிரேத பரிசோதனை முடிவில், இறந்த புலிக்கு 9 வயது இருக்கும். இரை தேடிய போது முள்ளம் பன்றியை வேட்டையாடியுள்ளது. அப்போது, அதன் முட்களால் புலியின் கால் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், புலியின் இரைப்பையில் இருந்தும் முள்ளம் பன்றியின் முட்கள் எடுக்கப்பட்டன. இதன் காரணமாகவே புலி உயிரிழந்துள்ளது என்று தெரிவிக்கப் பட்டது. பின்னர், புலியின் உடல் அங்கேயே எரியூட்டப்பட்டது.