மானாமதுரை | சேதமடைந்த கிராம சாலையால் சைக்கிள் ஓட்ட முடியாமல் மாணவர்கள் சிரமம்

மானாமதுரை | சேதமடைந்த கிராம சாலையால் சைக்கிள் ஓட்ட முடியாமல் மாணவர்கள் சிரமம்
Updated on
1 min read

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மோசமான சாலையால் மாணவ, மாணவிகள் சைக்கிளை கூட ஓட்ட முடியாமல் இறங்கி தள்ளிச் செல்கின்றனர்.

மானாமதுரை அருகே குவளைவேலி கிராமத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 4 கி.மீ. தொலைவில் உள்ள கட்டிக்குளம் அரசு மேல் நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். ஆனால், குவளைவேலியிலிருந்து கட்டிக்குளம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்காததால், மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இவ்வழியாக மாணவர்கள் சைக்கிளில் செல்லும்போது அடிக்கடி டயர் பஞ்சராகிறது.

மேலும், சைக்கிளை ஓட்ட முடியாமல் மாணவர்கள் இறங்கி தள்ளிச் செல்கின்றனர். இதனால், அவர்கள் பள்ளிக்கு தாமதமாகச் செல்லும் நிலை உள்ளது. மேலும், ஆட்டோக்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதற்கு கூட சிரமப்படுகின்றன. இச்சாலையை சீரமைக்க, அப்பகுதி மக்கள் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இது குறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில், ‘சாலை மிகவும் மோசமாக உள்ளதால், சைக்கிளில் செல்ல முடியவில்லை. வாரத்துக்கு ஒருமுறையாவது சைக்கிள் டயர் பஞ்சராகி விடுகிறது. சில சமயங்களில் டயரை மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. சைக்கிளை தள்ளிக் கொண்டுதான் செல்ல வேண்டியிருக்கிறது.

எனவே, சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்’ என வலியுறுத்தினர். இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டபோது, புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in