திருநெல்வேலி | நெல்லுக்கு வேலியிட்ட ஊரில் கைகொடுக்காத கார் சாகுபடி

திருநெல்வேலி அருகே மேலகருங்குளத்தில் உள்ள செட்டிக்குளம் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. படம்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலி அருகே மேலகருங்குளத்தில் உள்ள செட்டிக்குளம் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை காலத்துக்கு பின்னரும் வெயில் சுட்டெரித்தது. மாவட்டத்தில் போதிய அளவுக்கு மழை பெய்யவில்லை என்பதால், பிரதான அணையான பாபநாசம் அணையில் தண்ணீர் பெருகவில்லை.

இதனால் ஜூன் முதல் வாரத்தில் கார் சாகுபடிக்காக இந்த அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே, இவ்வாண்டு கார் பருவத்தில் நெல் சாகுபடி பெரும்பாலும் நடைபெறவில்லை. மாவட்டத்தில் 2023 - 2024-ம் ஆண்டில் 41,016 ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

அதில் கார் பருவத்தில் மட்டும் 12,305 ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை வெறும் 4,001 ஹெக்டேர் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 10,243 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் மழை பெய்யாத நிலையில், தற்போது ஓரளவுக்கு மழை பெய்து வருகிறது.

இதனால் பிசான சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். பிசான பருவத்தில் 27,891 ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. சிறு தானியங்கள், பயறு வகை பயிர்கள், பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்து பயிர்கள், காய் கறிகள் என, அனைத்து பயிர்களின் சாகுபடியிலும் பெருமளவுக்கு சரிவு காணப்படுகிறது.

வாழை சாகுபடி இலக்கான 6,287 ஹெக்டேரில் தற்போது வரை 4,029 ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 41.48 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வளமையான மழையளவைவிட 37.35 சதவீதம் கூடுதல். செப்டம்பர் மாதம் முடிய 270.90 மி.மீ. மழை கிடைத்துள்ளது.

இது வளமையான மழையளவைவிட 17.65 சதவீதம் குறைவு. மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டு சராசரி மழையுடன் ஒப்பிடும்போது 41.12 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 781 கால்வரத்து குளங்களில் 762 குளங்கள் வறண்டுள்ளன. 17 குளங்களில் ஒரு மாதத்துக்கு பயன்படுத்தும் அளவுக்கு தண்ணீர் உள்ளது.

316 மானாவாரி குளங்களில் 310 குளங்கள் வறண்டுள்ளன. 6 குளங்களில் ஒரு மாதத்துக்கு பயன்படுத்தும் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்தமாக 1,097 குளங்களில் 1,072 குளங்கள் வறண்டுள்ளன. பாபநாசம், சேர்வலாறு, மணி முத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடு முடியாறு ஆகிய 6 அணைகளின் மொத்த கொள்ளளவு 12,882 மில்லியன் கனஅடி.

தற்போது 3629.6 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 4291.71 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. மொத்தமாக அணைகளில் தற்போது 28.17 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 33.31 சதவீதம் தண்ணீர் இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in