

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த மாதத்தில் இருந்து மிதமான மழை பெய்து வந்தது. இது இம்மாதம் தொடக்கத்தில் இருந்து கன மழையாக மாறியது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேற்கு மாவட்டப் பகுதியான வைக்கலூர், முஞ்சிறை பகுதிகளில் குடியிருப்புகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம் வடியாத நிலையில் மீண்டும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், கொட்டாரம், குருந்தன்கோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் சாலைகள், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், சந்தையடி பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக் குள்ளானார்கள். கொட்டாரத்தில் அதிகபட்சமாக 74 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாகர்கோவில், தக்கலை, குளச்சல், இரணியல், குலசேகரம், ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, அடையாமடை, குருந்தன்கோடு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்தது.
தொடர் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உட்பட குமரி மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்திலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். சிற்றாறு அணைப் பகுதியில் மழை சற்று குறைந்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. அணையிலிருந்து வெளியேற்றப் பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப் பட்டுள்ளது. இதனால், கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ள அபாயம் நீங்கியுள்ளது.
குளிப்பதற்கு அனுமதி: திற்பரப்பில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அங்கு மழை விட்டு விட்டு பெய்து வருவதால் இதமான சூழல் நிலவுகிறது. 9 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு நேற்று அனுமதி அளிக்கப பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாக குளியலிட்டு மகிழ்ந்தனர். மாம்பழத்துறையாறு அணை மழையால் முழு கொள்ளளவான 54.12 அடி எட்டி, மறுகால் பாய்கிறது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 40.46 அடியாக இருந்தது. அணைக்கு 704 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 229 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 69.75 அடியாக உள்ளது. அணைக்கு 496 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் 23.50 அடியாக உள்ளது. தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் ஏற்கெனவே 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. நேற்று காலை 8 மணி வரையான 24 மணி நேரத்தில் மயிலாடியில் 43 மிமீ., நாகர்கோவிலில் 27, தக்கலையில் 22, மாம்பழத்துறையாறில் 45, ஆரல்வாய்மொழியில் 35, குருந்தன்கோட்டில் 35, ஆணைகிடங்கில் 43 மிமீ., மழை பதிவாகியுள்ளது.