

மதுரை: ‘வனப்பகுதியில் உள்ள கோயில்களுக்கு செல்பவர்கள் பொறுப்பில்லாமல் வனப்பகுதியை குப்பையாக்கி திரும்புகின்றனர்’ என நீதிபதி வேதனை தெரிவித்தார்.
விருதுநகரைச் சேர்ந்த சடையாண்டி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி மலையில் ஆனந்த வள்ளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நவராத்திரி திருவிழா நடைபெறும். இவ்விழாவை ஒட்டி பக்தர்கள் 3 நாள் கோயிலில் தங்கியிருக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலர் திலிப்குமார் ஆஜரானார். அவர் கூறுகையில், "சாப்டூர் மலைப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. புலிகள் சரணாலய பகுதியாக உள்ளதால் பக்தர்களை அனுமதிக்க முடியாது. கடந்த காலங்களில் பக்தர்கள் மாற்று வழியில் வனத்திற்குள் நுழைந்து சமைத்ததால் வனத்தில் தீ பற்றி வனவிலங்குகளுக்கும், மரங்களுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது. வனப்பகுதிக்குள் 100க்கும் மேற்பட்ட சட்ட விரோத கோயில்கள் உள்ளன. சதுரகிரி மலைப்பகுதியில் மட்டும் 18 மடங்கள் சட்டவிரோதமாக உள்ளன" என்றார்.
இதையடுத்து நீதிபதி, "பக்தர்கள் மற்றும் சாதுக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஒரு நாள் மட்டும் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கலாமே?. கோயிலில் தங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டாம். குறிப்பிட்ட நேரம் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாமே. அத்துமீறி செல்பவர்களுக்கு அபராதமும் தண்டனையும் விதிக்கலாமே. வனத்துறைக்கு நிறைய பணிகள் உள்ளது தெரியும். ஒரு 6 மணி நேரமாவது குறிப்பிட்ட அளவில் பக்தர்களை அனுமதிக்கலாம்" என்றார்.
தொடர்ந்து, "கோயிலுக்கு சாமி கும்பிட வருபவர்கள் பொறுப்பில்லாமல் வனப்பகுதியை குப்பையாக்கிவிட்டு திரும்புகின்றனர். அந்த குப்பைகளை எத்தனை பேர் அகற்றுகிறார்கள்?. கோயிலுக்குச் செல்ல அனுமதி கேட்பார்கள். அனுமதி வழங்கினால் வனத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை போட்டு செல்வார்கள். இது தான் வழக்கமாக நடைபெறுகிறது.
எத்தனை கோயில் நிர்வாகிகள், தர்ம கர்த்தாக்கள், பொதுமக்கள் வனத்தில் உள்ள கோயிலுக்கு சென்று அங்குள்ள குப்பைகளை சேகரித்துள்ளார்கள். வனப்பகுதியில் உள்ள கோயில்களில் என்ன நடக்கிறது என நீதிமன்றத்திற்கு நன்றாகவே தெரியும். அன்னதானம் போடுகிறோம், திருவிழா நடத்துகிறோம் என கூறி பணம் வசூலித்து வனப்பகுதியை குப்பையாக்கிறார்கள்.
வனப்பகுதியில் சட்டவிரோத கட்டுமானங்களை அறநிலையத்துறை அனுமதித்தது எப்படி?. இந்த வழக்கில் விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். அவர் கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் பாதுகாப்பு வழங்குவது குறித்து நாளை பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.