

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் வையாவூர், நத்தப்பேட்டை ஏரிகள் அமைந்துள்ளன. நத்தப்பேட்டை ஏரி நிரம்பினால் கலங்கல் வழியாக வெளியேறும் உபரிநீர், வையாவூர் ஏரியை சென்றடையும். நகரப் பகுதியின் நடுவே உள்ள மஞ்சள்நீர் கால்வாய் மூலம், மழைநீர், கழிவுநீர் நத்தப்பேட்டை ஏரிக்கு செல்கிறது. மேலும், இந்த ஏரியை திடக்கழிவு குப்பைகளால், மாநகராட்சியே ஆக்கிரமிப்பு செய்து வருகிறது.
இப்பகுதியில் உள்ள 2 ஏரிகளையும் பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது. இந்த ஏரிக்கரைகளில் பறவைகளுக்கு பயன்படும் வகையிலான மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவேண்டும் என வனத்துறை, நீர்வள ஆதாரத் துறைக்கு பசுமை தீர்ப்பாயம் பரிந்துரை செய்துள்ளது. ஆனாலும், இதற்கான நடவடிக்கைகளை இத்துறைகள் மேற்கொள்ளாமல் உள்ளன.
இதேபோல, மாநகரின் பாதாள சாக்கடை திட்டம் மூலம் சுத்திகரிக்கப்படும் கழிவுநீரும் நத்தப்பேட்டை ஏரியில் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஆண்டு முழுவதும் நத்தப்பேட்டை ஏரி தண்ணீர் நிரம்பி காணப்படும்.
இந்த பகுதியில் மட்டும்தான் திடக்கழிவு குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியாளர்கள் ஒப்பந்த முறையில் அமர்த்தப்பட்டுள்ளனர். எனினும், பணியாளர் பற்றாக்குறை இருப்பதோடு, குப்பைகளை பிரித்தெடுக்க 2 இயந்திரங்கள் மட்டுமே உள்ளன. அதில் ஒன்று பழுதாக உள்ளதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதனால், பறவைகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்தல், மாநகராட்சி குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளை வனத்துறை, நீர்வளத் துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம், ஏரி நீர் தூய்மையடைந்து பறவைகளின் வரத்தும் அதிகரிக்கும். நத்தப்பேட்டை ஏரி நீர்ப்பாசனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அத்துறையும் இதை கண்டு கொள்ளாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, இங்குள்ள குப்பைகளை விரைந்து தரம் பிரிக்க தேவையான பணியாளர்களை மாநகராட்சி நியமிப்பதோடு இயந்திரங்களை பழுதுநீக்கித் தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் எழிலன் என்பவர் கூறியதாவது: நத்தப்பேட்டை ஏரியைமாநகராட்சியே குப்பை கிடங்குக்காக ஆக்கிரமிப்பது சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் வகையில் உள்ளது. குப்பை பிரிப்பதற்கு பயோ கேஸ் முறையை பயன்படுத்தினால் எளிதில் குப்பைகளை அகற்றலாம். மழைக்காலம் தொடங்க உள்ளதால் ஏரியில் நீர் வரத்து அதிகரிக்கும். எனவே ஏரியில் உள்ள ஆகாய தாமரை செடிகளையும், குப்பைகளையும் அகற்றி ஏரியை விரிவாக்கம் செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ரயில் பயணி பூ.யுவஸ்ரீ என்பவர் கூறும்போது, நத்தப்பேட்டை ஏரியின் நடுவில் ரயில் பாதை உள்ளது. இவ்வழியாக ரயிலில் செல்லும் பயணிகள் நத்தப்பேட்டை ஏரியின் இயற்கையை ரசிப்பதுண்டு. ஆனால் கடந்த சில மாதங்களாக குப்பையினால் ஏற்படும் துர்நாற்றத்தாலும், குப்பைகளை எரிப்பதால் பிளாஸ்டிக்கில் இருந்து வெளியாகும் புகையினாலும் சுவாச பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த குப்பை கிடங்கை சுற்றி இருக்கும் குடியிருப்புகளில் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதுகுறித்து விளக்கமளித்த மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன், நத்தப்பேட்டை ஏரிக்கு அருகில் தான் குப்பை கிடங்கு உள்ளது. ஏரியை ஆக்கிரமிக்கவில்லை. பணியாளர்கள் நாள்தோறும் குப்பையை பிரித்தெடுக்கின்றனர். மாநகராட்சி குப்பை கிடங்குக்கு நாள்தோறும் சுமார் 24 டன் குப்பை கொண்டுவரப்படுகிறது. மழையின் காரணமாக பணிகள் சற்று தாமதமாகிறது. மக்களிடம் பிளாஸ்டிக் குப்பையை தனியாக கொடுக்கும்படி பல மாதங்களாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அவர்களும் ஒத்துழைத்தால் நன்றாக இருக்கும் என்றார்.