திருப்பத்தூர் அருகே ரசூல்கான் ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள்

ஏரியில் இறந்து மிதந்த மீன்கள்.
ஏரியில் இறந்து மிதந்த மீன்கள்.
Updated on
1 min read

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ஏரியில் மீன்கள் இறந்து மிதந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் ஆதியூர் ஊராட்சியில் சேலம் பிரதான சாலையை ஒட்டியுள்ள ரசூல்கான் ஏரி 25 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இந்த ஏரியில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஏரியில் வளர்க்கப்பட்ட மீன்கள் கொத்து, கொத்தாக நேற்று இறந்து மிதந்தன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘ஆதியூர் ஊராட்சியில் உள்ள ரசூல்கான் ஏரியில் பல வகையான மீன்கள் வளர்க்கப்படுகின்றன. ஏரியில் பிடிக்கப்படும் மீன்கள் சுற்று வட்டார கிராமங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த ஏரியில் ஆங்காங்கே மீன்கள் கொத்து, கொத்தாக இறந்து மிதக் கின்றன. இதன்காரணமாக, சுற்றுவட்டார பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இறந்த மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல மீன்கள் கொத்து, கொத்தாக இறந்தன. அப்போது, ஏரியில் மீன் பிடிக்க விடப்படும் ஏலத்தை எடுக்கும் போட்டியில் சிலர் ஏரியில் விஷம் கலந்ததாக அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர். அதேபோன்று தற்போதும் ஏரியில் விஷம் கலக்கப் பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இதுசம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

கழிவுநீர் கலப்பு... இதுகுறித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கேட்டபோது, ‘‘ஆதியூர் ரசூல்கான் ஏரி திருப்பத்தூர் நகரத்தை ஒட்டிய பகுதியில் உள்ளது. இதனால் நகரத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக இந்த ஏரியில் கலக்கிறது. இதனால், இயல்பாகவே இந்த ஏரி துர்நாற்றம் வீசுகிறது. ஏரியில் மீன்கள் இறந்ததாக இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை.

இருப்பினும், இறந்த மீன்களை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கழிவுநீர் கலப்பதால் கூட மீன்கள் இறந்திருக்கலாம். ஆய்வு நடத்திய பிறகே உண்மை நிலவரம் தெரியவரும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in