

கே
மரா பிடிக்கும் பெண்கள் இன்று சாதாரணமாகிவிட்டார்கள். பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் வசிக்கும் ஸ்ரீதேவியும் கேமரா பிடிப்பவர்தான். இவர் கேமராவுக்கு போஸ் கொடுப்பது காடுகளும் காடு வாழ் உயிரினங்களும் என்பது மட்டும்தான் வித்தியாசம்.
“திருப்பூர் மாவட்டம் அமராவதி செக்போஸ்ட் அருகில்தான் எங்கள் வீடு. எனது தந்தை ஜெயச்சந்திர ராஜா, நூல் மில் நடத்தி வருகிறார். நான் 8 வயது சிறுமியாக இருந்தபோது என் அப்பா காட்டுப் பகுதிக்கு கானுலா அழைத்துச் செல்வார். ஒவ்வொரு வாரமும் கானுலா செல்வது வழக்கம். அப்போது இருந்தே காடு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
அப்போது கோவையைச் சேர்ந்த சத்தியநாராயணன், சின்னாறு காட்டுக்குள் ஒளிப்படம் எடுக்கவந்தார். அங்கு கானுலா சென்றிருந்த எனக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்தான் ஒளிப்படம் எடுக்கக் கற்றுத் தந்தார். இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டோம். செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்த எனது கணவருக்கு திருநெல்வேலிக்கு இடமாறுதல் வந்ததால் தற்போது பாளையங்கோட்டையில் வசிக்கிறோம்” என்று சுயஅறிமுகம் தந்தவர், காட்டுயிர் ஒளிப்படம் தொடர்பான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
“வால்பாறை, டாப்ஸ்லிப், சத்தியமங்கலம், களக்காடு, முண்டந்துறை, பரம்பிகுளம், முதுமலை, கேரள மாநிலம் மறையூர், மூணாறு, கர்நாடக மாநிலம் பந்திபூர், மகாராஷ்டிர மாநிலம் தடோபா உட்பட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஒளிப்படம் எடுத்துள்ளேன்.
பல முறை யானை என்னை விரட்டியுள்ளது. கீழே விழுந்து காயம் அடைந்த சம்பவங்களும் உண்டு. இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த உயிரினம் யானைதான். எந்த விலங்காக இருந்தாலும் அவற்றை நாம் தொந்தரவு செய்யாமல் இருந்தால் அவையும் நம்மைத் தொந்தரவு செய்யாது. குட்டிகளுடன் உள்ள உயிரினங்களை நெருங்கக் கூடாது. தனது குட்டிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவை நம்மைத் தாக்கக்கூடும்.
எனவே, குட்டிகளுடன் உள்ள உயிரினங்களின் அருகில் சென்று ஒளிப்படம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்பவர், வார இறுதி நாட்களில் பள்ளி மாணவ-மாணவிகளைக் காட்டுக்கு அழைத்துச் சென்று விலங்குகள், பறவைகள் பற்றி கற்றுக்கொடுக்கும் சேவையை செய்துவருகிறார்.