

மதுரை: தமிழகத்தில் இன்னும் பெரும்பாலான மாவட்டங்களில் சிறிதளவுகூட மழை பெய்யாமல் உள்ளது. இனி வரும் 3 மாதங்கள் (அக்டோபர், நவம்பர், டிசம்பர்) மட்டுமே மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதனால் நீர்நிலைகளை தூர்வார வேண்டும் என்று வேளாண் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய 14 மாவட்டங்களில் சில இடங்களில் அதிக மழை பெய்தும், பெரும் பாலான இடங்களில் மழை பெய்யவில்லை.
இதனால் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் குறைந்துவரும் மாதங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் நீர் ஆதாரமான வைகை அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்த அணையை தூர்வாரும் திட்டமும் தாமதமாகி வருகிறது. வடகிழக்கு பருவமழை இன்னும் பெய்யாததால் விவசாயம், குடிநீருக்கு மட்டுமில்லாது கால்நடைகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில் தமிழகத்தில் நிறைய ஆழ்துளை கிணறுகள் பயனற்று உள்ளன. வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்பே அதிக விவசாயம் உள்ள பகுதிகளில் இருக்கும் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.
ஓடைகளில் கிடக்கும் தென்னை மரத்தின் அடித்தண்டு போன்ற தாவரக் கழிவுகளை அகற்றி, சிறிய மழை பெய்தாலும் குளத்தில் தண்ணீர் சேரும் வகையில் இந்த மாதத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்து தலை வர்களும் பொறுப் புணர்ந்து செயல்பட வேண்டும். தண்ணீர் இருக்கும் குளங்களில் மேட்டுப்பகுதிகளில் தூர் வாரலாம். குளங்களில் தண்ணீர் தேங்கினால் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயரும். கிராமங்களில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை அதிகமாகி தண்ணீர் நுகரும் திறனும் அதிகரித்துள்ளது. இதனால் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நவ.20-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது. பெரும்பாலான வெளிநாட்டு வானிலை நிறுவனங்கள் சராசரிக்கும் குறைவான மழைப் பொழிவு அல்லது குறைவான மழை நாட்கள் இருக்கும் என கணித்துள்ளன. ஆகவே அதற்கு முன்பே மழைநீர் சேகரிக்கும் கட்டமைப்புகளை முறைப்படுத்துவது பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி அமைப்புகளின் கடமை யாகும். நீர் வழித்தடங்களை முழுமையாக ஆய்வு செய்து தவறுகள் திருத்தப்பட வேண்டும்.
டிச.10 வரை மட்டுமே குறிப்பிடத் தகுந்த அளவு மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இக்காலகட்டத்தில் சுமார் 5 முதல் 8 உழவு மழை மட்டுமே அதிகபட்சம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிலும் பொதுவாக 4 அல்லது 5 உழவு மழை மட்டுமே பரவலாகக் கிடைக்கும். மண்ணில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும். மழை பெய்து முடிந்தவுடன் நிலத்தை உழுதால் ஏர்க்கால் இறங்கும் அளவு பூமி நனைந்திருந்தால் அதுதான் உழவு மழை. ஒரு உழவு மழை என்பது சுமார் 25 மி.மீ. வறட்சியை சமாளித்து நிலத்தடி நீர் உயர சுமார் 6 உழவு மழையாவது தேவை.
பொதுவாக செம்மண், மணல் வகை நிலப்பகுதியில் விவசாயிகள் வயலைச் சுற்றி வரப்பு அமைத்து பெய்யும் மழைநீரை வயலில் சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆழ்துளைக் கிணறு வற்றாமல் இருக்கும். இந்த வகை நிலங்களில் 3 நாட்கள் வரை தண்ணீர் தேங்கி இருந்தாலும் பயிருக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. அதனால் தாழ்வான இடங்களில் குழி எடுத்து வரப்பு அமைப்பது மற்றும் மண் வரப்புகளை உயர்த்தி வயலில் தண்ணீரை சேகரிக்கலாம்.
தண்ணீர் தேங்கி இருந்தால் உப்பு அதாவது அமிலத் தன்மை 7.5-க்கு மேல் இருந்தாலும் உப்பு அலசப்பட்டு அதன் பாதிப்பு பெருமளவில் குறைந்து விடும். களிமண் வயலிலும் வடிகால் வசதியை உறுதிப்படுத்திவிட்டு மழைநீரை சேமிக்கலாம். இதனால் மண்ணில் உப்புத் தன்மை குறைவதோடு ஆழ்துளை கிணறுகளில் தண்ணீரின் தன்மையும் மாறும். சுண் ணாம்பால் ஏற்படும் பிரச்சினைகள் தீரும். இவ்வாறு அவர் கூறினார்.